வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 11) பேரணி சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
“வாக்காளர் பட்டியல் மோசடி” மற்றும் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் “சிறப்பு தீவிர திருத்தம்” (SIR) ஆகியவற்றை எதிர்த்து இந்திய கூட்டணி எம்.பி.க்கள் இன்று (ஆகஸ்ட் 11) நாடாளுமன்றத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
தமிழக எம்.பி.க்களான ஆ.ராசா,கனிமொழி, திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், துரை வைகோ உள்ளிட்டோர் “வாக்கு திருட்டு” என்ற பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர்.

இந்தநிலையில் எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி செல்லாதவாறு பேரிகார்டுகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீசாருக்கும், மத்திய அரசுக்கும் எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

“எங்களை தடுக்க காவல்துறையை பயன்படுத்துவதா” என சமாஜ்வாதி கட்சி எம்.பி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசாரின் பேரிகார்டுகளை தாண்டி குதித்துச் சென்றார்.

அதேபோன்று மஹுவா மொய்த்ரா, சுஷ்மிதா தேவ், மிதாலி பக், ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்.பி.க்களும் பேரிகார்டுகளை தாண்டி குதித்துச் சென்றனர். இந்தசூழலில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மிதாலி பக் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த ராகுல் காந்தி, அவரைத் தூக்கிச் சென்று காரில் ஏற்றுவதற்கு உதவினார்.
தேர்தல் ஆணையத்தை நோக்கி சென்ற அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் கைது செய்த போலீசார் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“ஜனநாயகம் தாக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு வெளியே படுகொலை செய்யப்படுகிறது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

திமுக எம்.பி.கனிமொழி, “மக்களின் வாக்குரிமையை மதிப்பிழக்கச் செய்யும் எவ்வித முயற்சியையும் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. முழு வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டுமென்றும், இம்முறைகேடுகள் குறித்து சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொண்டு, தேர்தல் மீதான நம்பிக்கையை உறுதிசெய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.