அதிகாரப் பரவலாக்கத்திற்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம்- பகுதி-7

Published On:

| By Mathi

Federalism Article

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6

துணை அமைப்புக் கொள்கைக்கான வாதம்: குடிமக்களுக்கு மிக நெருக்கமாக இயங்கும்போது ஜனநாயகம் ஏன் சிறப்பாகச் செயல்படுகிறது

ADVERTISEMENT

-அசோக் வர்தன் ஷெட்டி

ரசாங்கச் செயல்பாடுகள் அவற்றைத் திறம்படச் செய்யக்கூடிய கீழ்நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அந்த நிலையில் செயல்படுவதற்கான திறன் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவை மேல்தளத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் துணை அமைப்புக் கொள்கை (The Principle of Subsidiarity) வலியுறுத்துகிறது. இது தேச-அரசு குறித்த மரபான, மேலிருந்து கீழ்நோக்கிய கருத்துருவைத் தலைகீழாக மாற்றுகிறது. அதிகாரம் என்பது இறையாண்மையுள்ள தலைநகரத்திலிருந்து கீழமை அலகுகளுக்கு இறங்குவதில்லை; மாறாக, அது குடிமக்களிடமிருந்து சமூகங்களுக்கும், சமூகங்களிடமிருந்து மாநிலங்களுக்கும், தேவையேற்படும் சூழல்களில் மட்டுமே ஒன்றியத்திற்கும் மேல்நோக்கிச் செல்கிறது.

ADVERTISEMENT

இந்தக் கருத்துருவின்படி, சமூகம் என்பது ஆளுகையின் வாழும் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது; அதேவேளையில், ஒன்றியம் என்பது உள்ளூர் திறனுக்கு அப்பாற்பட்ட பணிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருத்தியல் வடிவமாகவே உள்ளது. எனவே, அதிகார மையப்படுத்துதல் (centralisation) என்பது ஆளுகையின் இயல்பான நிலை அல்ல; மாறாக, அது தகுந்த காரணங்காட்டி நிறுவப்பட வேண்டிய ஒரு விதிவிலக்காகும்.

பன்னாட்டு அளவுகோல்கள்

ADVERTISEMENT

முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடுகள், இந்தக் கீழிருந்து மேல்நோக்கிய தர்க்கத்தைத் தங்கள் அரசமைப்புச்சட்ட ரீதியான   வடிவமைப்பிலேயே வலுவாகப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, பகிர்ந்தளிக்கப்படாத அதிகாரங்கள் (undelegated powers) அனைத்தையும் அதன் பத்தாவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மாநிலங்களுக்கோ அல்லது மக்களுக்கோ ஒதுக்குகிறது. இந்தத் திருத்தத்தில் துணை அமைப்புக் கொள்கை வெளிப்படையாகப் பெயரிடப்படாவிட்டாலும், அதன் அடிப்படை அங்கு ஆழமாகப் பதிந்துள்ளது. காலப்போக்கில், நீதிமன்றத் தீர்ப்புகள் (judicial interpretation) மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகள் (fiscal instruments) வழியாகக் கூட்டாட்சி அதிகாரம் விரிவடைந்துள்ளது. இருந்தபோதிலும், மாநிலங்களுக்குத்தான் செயல்படும் திறன் உள்ளது என்பதே அரசமைப்புச்சட்ட ரீதியான  அடிப்படை அனுமானமாகத் தொடர்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் (1992), தனது ஒப்பந்தத்தின் 5(3) ஆவது அரசமைப்புச் சட்டப்பிரிவில் துணை அமைப்புக் கொள்கையை வெளிப்படையாகவே இணைத்துள்ளது. உறுப்பு நாடுகளால் (Member States) சில இலக்குகளை முழுமையாக அடைய முடியாத சூழலில் மட்டுமே, ஒன்றியம் செயல்பட இது அனுமதிக்கிறது.

துணை அமைப்புக் கொள்கை அரசமைப்புச் சட்டத்தில் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதற்குச் சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அங்கு இறையாண்மை என்பது மாகாணங்களில் (Cantons) இருந்தே தொடங்குகிறது. மேலும், பொதுப் பணிகளை ஒதுக்குவதிலும் செயல்படுத்துவதிலும் துணை அமைப்புக் கொள்கையே வழிகாட்ட வேண்டும் எனச் சுவிஸ் அரசமைப்புச் சட்டத்தின் 5a எனும் அரசமைப்புச் சட்டப்பிரிவு வலியுறுத்துகிறது. தனக்கென வெளிப்படையாக வழங்கப்பட்ட வரம்பிற்குள் மட்டுமே சுவிஸ் கூட்டமைப்பு (confederation) அதிகாரம் செலுத்துகிறது.

இந்த அமைப்புகள் அனைத்திலும் உள்ள அடிப்படைப் புரிதல் ஒன்றுதான்: ஆளுகைக்கான திறன் உள்ளூர் அமைப்புகளிடம் இயல்பாகவே உள்ளது; மையத் தலையீடு (central intervention) என்பது ஒரு விதிவிலக்கு மட்டுமே.

இந்திய முரண்பாடு

இந்திய அரசமைப்புச்சட்டம், துணை அமைப்புக் கொள்கையிலிருந்து பெருமளவு விலகியுள்ளது. நமது அரசமைப்பின் ஏழாவது அட்டவணையானது, ஆளுகைக்கான திறன் ஒன்றியத்திடமே அதிகம் உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஒன்றியப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலின் அசாதாரணமான விரிவும் நுட்பமும், இனம் 97-இன் கீழ் எஞ்சிய அதிகாரங்கள் (residuary powers) ஒன்றியத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளதும் இதனைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. இதனுடன் ஒப்பிடுகையில், மாநிலப் பட்டியல் மிகவும் சுருக்கப்பட்டுள்ளது. தேசப்பிரிவினை குறித்த கவலைகள், சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பிரிவினைவாதம் குறித்த அச்சம் ஆகியவற்றால் உருவான இந்த வடிவமைப்பு, உள்ளூர் ஆளுகையின் மீதான அமைப்புரீதியான அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

அதிகார ஒதுக்கீடுகள் பலவும் இந்த முரண்பாட்டை அப்பட்டமாக விளக்குகின்றன. ஒன்றியப் பட்டியலில், குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் (இனங்கள் 62 மற்றும் 63) போன்றவை அடங்கியுள்ளன. மேலும், துறைமுகங்களில் தொற்றுநோய்த் தடை ஒதுக்கம் தொடர்பான மருத்துவமனைகள் (port quarantine hospitals) (இனம் 28) போன்ற அன்றாடச் செயல்பாட்டு விவகாரங்களும் இதில் உள்ளன. உள்ளூர்ச் சூழல்களுக்கு ஏற்ப நுட்பமாக அணுக வேண்டிய துறைகளான ‘நாடோடியாகத் திரிதல்’ (vagrancy) (இனம் 15), அறக்கட்டளைகள் (charities) (இனம் 28) போன்றவை பொதுப் பட்டியல் வரை நீண்டுள்ளன.

பொதுப் பட்டியல் துறைகளில்கூடத் துணை அமைப்புக் கொள்கை நீர்த்துப்போகிறது. மாநிலச் சட்டங்களுக்கும் ஒன்றியச் சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்படும்போது ஒன்றியச் சட்டத்திற்கே முன்னுரிமை அளிக்கும் 254(1) ஆவது அரசமைப்புச் சட்டப்பிரிவு இதை வலுவிழக்கச் செய்கிறது. பொதுப் பட்டியல் துறைகளில் (எடுத்துக்காட்டு, இனம் 17A-இன் கீழான காடுகள்), நாடாளுமன்றம் பெரும்பாலும் முழுமையான சட்டங்களை இயற்றிவிடுவதால், மாநிலங்கள் சுயமாகச் செயல்படுவதற்கான வெளி மிகக் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக, பன்முகத்தன்மையை அழித்து, மாநிலங்களின் புதிய பரிசோதனை முயற்சிகளை முடக்கும் விரிவான தேசியச் சட்டங்களின் ஆதிக்கமே எழுகிறது.

பல்வேறு துறைகளிலும் துணை அமைப்புக் கொள்கை பின்பற்றப்படாத நிலை தெளிவாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, தொழில் கொள்கையானது (Industrial policy) நிலம் கிடைப்பது, தொழிலாளர் சந்தைகள், உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் வட்டாரப் பொருளாதாரச் சூழலமைப்புகள் ஆகியவற்றை — அதாவது மாநில அரசுகளின் முக்கியப் பொறுப்புகளை – பெரிதும் சார்ந்துள்ளது. துணை அமைப்புக் கொள்கையின்படி தொழில் கொள்கை மாநிலங்களிடமே இருக்க வேண்டும்; இது தொகுப்புகளை உருவாக்குதல் (clustering), வட்டாரச் சிறப்பாக்கம் (regional specialisation) மற்றும் மாநிலங்களுக்கிடையிலான போட்டியை ஊக்குவிக்கும். ஆனால், இதற்கு மாறாக, “பொது நலன்” (public interest) கருதி தொழில்துறைகள் மீது கட்டுப்பாட்டைத் தன்வசம் எடுத்துக்கொள்ள ஒன்றியப் பட்டியலின் இனம் 52 நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. குடியரசின் தொடக்கப் பத்தாண்டுகளில், 1951 ஆம் ஆண்டின் தொழில்துறை (மேம்பாடு மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தின் – Industries (Development and Regulation) Act, 1951 – வாயிலாக இந்த அதிகாரம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

துறைமுகங்கள் இதற்கு மற்றொரு சான்றாக விளங்குகின்றன. உலகளாவிய அளவில், துறைமுக ஆளுகை (port governance) பெருமளவுக்கு உள்ளூர் அல்லது பிராந்திய அளவிலேயே அமைந்துள்ளது. அமெரிக்காவில், பெரும்பாலான துறைமுகங்கள் உள்ளூர் அதிகார அமைப்புகளால் (local authorities) நிர்வகிக்கப்படுகின்றன; ஆஸ்திரேலியாவில் மாநிலங்களாலும்; ஜெர்மனியில் மாநிலங்கள் அல்லது உள்ளூர் அதிகார அமைப்புகளாலும்; சீனாவிலும்கூட நகராட்சி அரசாங்கங்களாலும் (எடுத்துக்காட்டாக, ஷாங்காய் துறைமுகம்) நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தியா இதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு நாடாக உள்ளது. முக்கியத் துறைமுகங்கள் ஒன்றியப் பட்டியலின் (இனம் 27) கீழ் வருகின்றன; பல மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளிட்ட சிறு துறைமுகங்கள்கூடப் பொதுப் பட்டியலில் (இனம் 31) வைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக, மாநிலங்களுக்கான தனித்த அதிகாரம் (exclusive authority) மறுக்கப்படுகிறது.

இதேபோன்று, மீன்வள ஒழுங்குமுறையும் (fisheries regulation) செயற்கையான அதிகார வரம்புப் பிரிவினைகளை (artificial jurisdictional divisions) வெளிப்படுத்துகிறது: “மீன்வளம்” (Fisheries) மாநிலப் பட்டியலிலும் (இனம் 21), “ஆட்சிநிலப்பகுதி சார்ந்த கடலுக்கு அப்பால் மீன்பிடித்தல் மற்றும் மீன்வளம்” (Fishing and fisheries beyond territorial waters) ஒன்றியப் பட்டியலிலும் (இனம் 57) இடம்பெற்றுள்ளன.

துணை அமைப்புக் கொள்கைக்கான பொருளியல், மேலாண்மை மற்றும் ஆளுகை சார்ந்த வாதங்கள்

பொருளியல், மேலாண்மைக் கோட்பாடு மற்றும் ஆளுகை சார்ந்த ஆய்வுகள் ஆகிய துறைகளில் ஒரு பரவலான கருத்தொற்றுமை உருவாகியுள்ளது: அதிகாரம் என்பது அறிவு, விளைவுகள் மற்றும் பொறுப்புடைமை (accountability) ஆகியவற்றுக்கு அருகில் அமையும்போதே மிகத் திறம்படச் செயல்படுகிறது.

துணை அமைப்புக் கொள்கைக்கான பொருளியல் நியாயம், வாலஸ் ஈ. ஓட்ஸ் (Wallace E. Oates) என்பவரால் அவரது ‘நிதியியல் கூட்டாட்சி’ (Fiscal Federalism, 1972) எனும் நூலில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டது. சமூகச் சூழல்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் செலவினங்கள் ஆகியவை பெருமளவு மாறுபடும் பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களில், ஒன்றிய அரசாங்கங்களால் (central governments) பல்வேறுபட்ட வட்டாரத் தேவைகளுக்கு ஏற்பக் கொள்கைகளை எதார்த்தத்தில் வடிவமைக்க முடியாது என்பதை அவரது “பரவலாக்கத் தேற்றம்” (Decentralisation Theorem) நிரூபித்தது. எனவே, நாடு முழுவதும் சீரான தரநிலைகளை உருவாக்குவது (uniform national standards) என்பது, எந்தவொரு தரப்பிற்கும் அரிதாகவே முழுமையான பலனைத் தரும் ஒரு மழுங்கிய கருவியாக மாறிவிடுகிறது. பரவலாக்கப்பட்ட ஆளுகை (Decentralised governance) மட்டுமே கொள்கைகளை உள்ளூர்ச் சூழல்களுடனும் விருப்பத்தேர்வுகளுடனும் மிக நெருக்கமாகப் பொருந்திப்போகச் செய்கிறது. இதன் விளைவாக, மையப்படுத்துதல் (centralisation) வழியாக நிர்வாகரீதியில் திறமையானதாகத் தோன்றுவது, பன்மைத்துவச் சமூகங்களில் (plural societies) பொருளாதாரரீதியான திறமையின்மையை (economic inefficiency) உருவாக்கக்கூடும்.

சார்லஸ் எம். டிபோட் (Charles M. Tiebout) உருவாக்கிய செல்வாக்குமிக்க மாதிரி இந்தப் புரிதலை மேலும் வலுப்படுத்துகிறது. மாநிலங்களும் உள்ளூர் அரசாங்கங்களும் வரிகள் மற்றும் பொதுச் சேவைகளின் (taxes and public services) வெவ்வேறு கலவைகளை வடிவமைக்கும்போது, குடிமக்கள் தங்கள் விருப்பங்களுக்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடிய அதிகார வரம்புகளைத் தேர்ந்தெடுக்க முடியும். இந்தச் செயல்முறை பெரும்பாலும் இடம்பெயர்வின் வழியாக தங்கள் விருப்பத்தேர்வை வெளிப்படுத்துதல் (voting with one’s feet) என விவரிக்கப்படுகிறது. இந்த நகர்வு (mobility) அரசாங்கங்களை நெறிப்படுத்துகிறது (disciplines), மக்களின் தேவைகளுக்குச் செவிசாய்ப்பதை (responsiveness) வெகுமதியாக்குகிறது; மேலும், பொது ஆளுகைக்கான ஒரு அரை-சந்தை முறைமையை (quasi-market mechanism) உருவாக்குகிறது. சீரான ஒன்றிய விநியோகம் (uniform central provision) இந்த முறைமையை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது; இதன்வழியாக, இது குடிமக்களுக்கான அர்த்தமுள்ள விருப்பத்தேர்வையும், அரசாங்கங்கள் புதிய முன்னெடுப்புகளைச் செய்வதற்கான உந்துதலையும் (incentives to innovate) பறித்துவிடுகிறது.

ஃபிரெட்ரிக் ஆகஸ்ட் வான் ஹயக்கின் (Friedrich August von Hayek) படைப்புகளில் இருந்து மற்றொரு வலுவான வாதம் எழுகிறது. 1945 ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘சமூகத்தில் அறிவின் பயன்பாடு’ (The Use of Knowledge in Society) என்ற கட்டுரையில், ஹயக் “அறிவுசார் சிக்கலை” (knowledge problem) பின்வருமாறு விவரித்தார்: பயனுள்ள முடிவெடுத்தல் என்பது “காலம் மற்றும் இடத்தின் குறிப்பிட்ட சூழல்கள்” தொடர்பான அறிவையே சார்ந்துள்ளது. இந்த அறிவு பரவலானதாகவும், சூழல் சார்ந்ததாகவும், பெரும்பாலும் வெளிப்படையாகச் சொல்லப்படாத ஒரு நுட்பமாகவும் (tacit) இருக்கிறது. இத்தகைய அறிவை எந்தவொரு சிதைவோ அல்லது தாமதமோ இன்றி முழுமையாகத் தொகுக்கவோ அல்லது ஒரு மைய அதிகார அமைப்பிற்கு மேல்நோக்கிக் கடத்தவோ முடியாது. எனவே, மையப்படுத்தப்பட்ட முடிவெடுத்தல் (Centralised decision-making) உள்ளூர் எதார்த்தங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, ஒரு கருத்தியல் தளத்திலேயே (in abstraction) இயங்குகிறது. அதிகாரத்தை அறிவுடனும், பொறுப்பைச் சூழலுடனும் ஒன்றிணைப்பதன் வாயிலாகத் துணை அமைப்புக் கொள்கை இந்தக் குறையைக் களைகிறது.

துணை அமைப்புக் கொள்கையின் தர்க்கம், மேலாண்மைக் கோட்பாட்டிலும் (management theory) வலுவான ஆதரவைப் பெறுகிறது. ‘முரண்பாடுகளின் காலம்’ (The Age of Paradox, 1994) என்ற நூலில், சார்லஸ் ஹேண்டி (Charles Handy) துணை அமைப்புக் கொள்கையை ஒரு “தலைகீழ் அதிகாரப் பகிர்வு” (reverse delegation) கொள்கையாக விவரித்தார்: அதாவது, செய்யப்படும் பணிக்கு மிக அருகில் உள்ளவர்களிடமே அதிகாரம் இருக்க வேண்டும். செயல்பாட்டு அலகுகளிடமிருந்து (operational units) முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பறிப்பது, ஊழியர்களின் மனவுறுதியைக் குலைக்கிறது; எதிர்வினைகளைத் தாமதப்படுத்துகிறது; மேலும் பொறுப்புடைமை (accountability) பலவீனப்படுத்துகிறது. எனவே, சிக்கலான நிறுவனங்கள் “கூட்டாட்சி” அமைப்புகளாகச் செயல்படும்போதே மிகச் சிறப்பான பலனைத் தருகின்றன. இத்தகைய அமைப்புகளில், தலைமையகமானது உத்தி மற்றும் வள ஒதுக்கீட்டில் (strategy and resource allocation) கவனம் செலுத்துகிறது; அதேவேளையில் செயல்பாட்டு அலகுகள் அவற்றைச் செயல்படுத்துவதில் தன்னாட்சியைக் கொண்டுள்ளன.

எலினோர் ஆஸ்ட்ரோமின் (Elinor Ostrom) ஆய்வுகள், துணை அமைப்புக் கொள்கைக்கான பட்டறிவுப்பூர்வமான ஆதரவை (empirical support) வழங்குகின்றன. ‘பொது வளங்களை நிர்வகித்தல்’ (Governing the Commons, 1990) என்ற நூலிலும், ‘சந்தைகள் மற்றும் அரசுகளுக்கு அப்பால்’ (Beyond Markets and States, 2009) என்ற அவரது நோபல் ஏற்புரையிலும் அவர் இதை நிறுவினார்: பல தன்னாட்சியான முடிவெடுக்கும் மையங்களைக் கொண்ட ‘பல்மைய அமைப்புகள்’ (polycentric systems), மையப்படுத்தப்பட்ட அதிகார வர்க்கங்களை (centralised bureaucracies) விடப் பெரும்பாலும் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை அவர் நிரூபித்தார். பல்வேறு நாடுகளிலுள்ள மீன்வளம், காடுகள், பாசன அமைப்புகள் மற்றும் பிற பொது பகிர்வு வளங்களை (shared resources) ஆராய்ந்த அவர், தொலைதூர அதிகார அமைப்புகளைவிட (distant authorities) உள்ளூர்ச் சமூகங்களே சிக்கலான வளங்களைப் பெரும்பாலும் மிக நீடித்த நிலைத்தன்மையுடன் (sustainably) நிர்வகிக்கின்றன என்பதைக் கண்டறிந்தார். அவர்களின் இந்த வெற்றிக்குச் சூழல் சார்ந்த அறிவு (contextual knowledge), பயனுள்ள கண்காணிப்பு மற்றும் சமூக நம்பிக்கை ஆகியவையே காரணமாக அமைகின்றன – இவை பொதுவாக மைய முகமைகளிடம் (central agencies) இல்லாத பண்புகளாகும். ஆஸ்ட்ரோமின் இந்தக் கண்டுபிடிப்புகள் துணை அமைப்புக் கொள்கையின் மையக் கோட்பாட்டை வலுப்படுத்துகின்றன: அறிவு எங்கு இருக்கிறதோ, அங்குதான் சிறப்பான ஆளுகை நிகழ்கிறது.

குடிமக்களின் பார்வை

குடிமக்களைப் பொறுத்தவரை, துணை அமைப்புக் கொள்கை பின்பற்றப்படாமையானது, பெரும்பாலும் ஆளுகையின் அன்றாடத் தோல்வியாகவே வெளிப்படுகிறது. உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கு உள்ளூர் அறிவு (local knowledge) தேவைப்படுகிறது. ஒரு குளத்தை தூர்வார வேண்டுமா அல்லது குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கின்றனவா என்பதை ஒரு கிராமவாசி அறிவார் – இந்த அறிவைத் தொலைதூர அதிகார அமைப்புகள் எதார்த்தத்தில் கொண்டிருக்க முடியாது. பிரச்சினைக்கு மிக அருகில் உள்ளவர்களால் முடிவுகள் எடுக்கப்படுவதைத் துணை அமைப்புக் கொள்கை உறுதிசெய்கிறது.

இது பொறுப்புடைமையையும் வலுப்படுத்துகிறது. வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் வடிகால் போன்ற விளைவுகளுக்குக் குடிமக்கள் உள்ளூர்ப் பிரதிநிதிகளைப் பொறுப்பாக்க முடியும். ஆனால், ஒன்றிய நிதியுதவி பெறும் திட்டங்களின் (centrally sponsored schemes) வாயிலாக இத்தகைய விளைவுகளுக்கு ஒன்றியம் பொறுப்பேற்கும்போது, இந்தப் பொறுப்புடைமைச் சங்கிலியானது (chain of accountability) தெளிவற்றதாக மாறுகிறது.

இந்தியாவிற்குத் துணை அமைப்புக் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட ஓர் அரசமைப்புச்சட்ட ரீதியான மறுமலர்ச்சி (constitutional renaissance) தேவைப்படுகிறது. மேலிருந்து கீழ்நோக்கிய இந்த அதிகாரக் கட்டமைப்பு (pyramid of power) தலைகீழாக மாற்றப்பட்டு, உண்மையான இறையாண்மை கொண்ட குடிமக்கள் (true sovereigns) அதன் அடித்தளத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதிகாரம் அவர்களிடமிருந்து உள்ளூர் நிறுவனங்களுக்கும், மாநிலங்களுக்கும், தேவையேற்படும் சூழல்களில் மட்டுமே ஒன்றியத்திற்கும் மேல்நோக்கிச் செல்ல வேண்டும். (தொடரும்)

கட்டுரையாளர் குறிப்பு:

கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு), 

  • இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
  • ன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share