அதிகாரப் பரவலாக்கத்திற்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம்- பகுதி-6

Published On:

| By Mathi

article fedaralism

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5

சமன்படுத்துதல் குறித்த பிழையான வாதம்: மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் மையப்படுத்துதல் ஏன் தோல்வியடைகிறது

ADVERTISEMENT

அசோக் வர்தன் ஷெட்டி

மையப்படுத்துதலுக்கு ஆதரவான மிகவும் வலுவான வாதங்களில் ஒன்று ‘சமமான குடியுரிமை’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. ஓர் அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தில், ஒருவரின் அடிப்படை கண்ணியமும் வாழ்க்கை வாய்ப்புகளும் நிலவியல் அமைப்பைச் சார்ந்து இருக்கக்கூடாது. வரலாற்று நோக்கில் பின்தங்கிய ஒரு மாநிலத்தில் பிறக்கும் குழந்தைக்கு, கொள்கை அளவில், செழிப்பான பிராந்தியத்தில் பிறக்கும் குழந்தைக்கு இணையான அடிப்படை ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து, சட்டப் பாதுகாப்பு ஆகியவை கிடைக்கப் பெற வேண்டும். எனவே, மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், ஒன்றியம் முழுவதும் அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களுக்கு நடைமுறைப் பொருளை வழங்குவதற்கும் தேசிய அதிகாரம் தலையிட வேண்டும் என்று இந்தச் சமன்படுத்தும் வாதம் வலியுறுத்துகிறது.

ADVERTISEMENT

இந்த அறம் சார்ந்த கோரிக்கை, ஒரு நடைமுறைச் அக்கறையினால் மேலும் வலுப்பெறுகிறது. பின்தங்கிய பிராந்தியங்களில் பெரும்பாலும் மனித மேம்பாட்டிற்காகப் போதிய முதலீடு செய்யத் தேவையான நிதித்திறன் இருப்பதில்லை. பகிர்ந்தளிக்கப்பட்ட வரிகள், நிதிப் பகிர்வுக் கொள்கை அல்லது சமன்படுத்தும் மானியங்கள் மூலம் மறுபகிர்வு செய்யப்படாவிட்டால், பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஆழமாகும். ஏற்றத்தாழ்வுகள் நிலைபெற்றவை ஆகிவிடும். இதற்காகவே, முதிர்ச்சியடைந்த அனைத்துக் கூட்டாட்சி நாடுகளும் தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதற்காக நிதிச் சமன்பாட்டு வழிமுறைகளைச் செயல்படுத்துகின்றன.

ஆயினும், சமன்படுத்துதல் குறித்த அற வலிமை, நிறுவன வடிவமைப்பு குறித்த கேள்விக்குத் தீர்வு தந்துவிடாது. இங்கே முக்கியமான விவாதம் என்னவென்றால், கொள்கை வடிவமைப்பு, திட்ட அமலாக்கம் ஆகியவற்றின் மீதான மையக் கட்டுப்பாடு, சமமான முடிவுகளை எட்டுவதற்கு அவசியமானதா அல்லது போதுமானதா என்பதுதான். மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் என்பது வெறும் நிதி சார்ந்தது மட்டுமல்ல. அவை மனித வளம், சமூக நிறுவனங்கள், நிர்வாகத் திறன், அரசியல் அணிதிரட்டலில் ஆகியவற்றில் நிலவும் வேறுபாடுகளிலிருந்தே உருவாகின்றன. உள்ளூர் அதிகாரம் (Local Agency) மூலமாக இல்லாமல், முதன்மையாக ஒன்றிய அரசின் தயவு (Central Patronage) மூலம் சமத்துவம் கோரப்படும்போது, அதன் விளைவாக ஒரு “பரிமாற்ற ராஜ்ஜியம்” (Transfer Raj) உருவாகிறது. இது மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலையிலேயே வைத்திருக்குமே தவிர, உண்மையான முன்னேற்றத்திற்குத் தேவையான நிறுவன மாற்றத்தை உருவாக்கத் தவறிவிடும்.

ADVERTISEMENT

இந்தியச் சான்றுகள்: செயல்முனைப்பும் உதவி அளித்தலும்

மத்தியக் கண்காணிப்பு மட்டுமே சமமான வளர்ச்சியை உறுதி செய்யும் என்ற நம்பிக்கைக்கு வலுவான மறுப்பு, இந்திய மாநிலங்களின் ஒப்பீட்டுப் பொருளாதார வரலாற்றில் உள்ளது. அ. கலையரசன், மு. விஜயபாஸ்கர் ஆகியோர் எழுதிய திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை விளக்குதல் (The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu, 2021) நூலில் ஆவணப்படுத்தியுள்ளபடி, பீகாரும் அப்போதைய சென்னை மாநிலமும் (இப்போதைய தமிழ்நாடு) சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரே மாதிரியான பின்தங்கிய நிலைமைகளுடனேயே தொடங்கின. 1960-களின் தொடக்கத்தில் பீகார் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக இருந்தது. சென்னை மாநிலமும் வருமானம் மற்றும் பல வளர்ச்சி குறியீடுகளில் மாநிலங்களின் வரிசையில் கீழ் பாதியிலேயே இருந்தது.

கடுமையான மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி மாதிரியின் கீழ், பல பத்தாண்டுகள் கால சீரான திட்டமிடல், தேசியத் திட்டங்கள், நிதிப் பகிர்வுகள் அனைத்து மாநிலங்களையும் ஒரே நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் பீகாருக்கு அதிகமாக வழங்கப்பட்டன. ஆனால், முடிவுகள் முற்றிலும் வேறாக அமைந்தன.

ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, தனிநபர் வருமானம், சுகாதார நிலைமைகள், கல்வித்திறன், மனித மேம்பாடு உள்ளிட்ட பெரும்பாலான குறியீடுகளில் பீகார் இன்றும் அடிமட்டத்திலேயே அல்லது அதற்கு அருகிலேயே உள்ளது. இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு தனிநபர் வருமானம், ஆயுள் காலம், குழந்தை இறப்பு விகிதக் குறைவு, பிறப்பு விகிதக் குறைவு, பள்ளிக் சேர்க்கை, உயர்கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதம், தொழில்துறைப் பன்முகத்தன்மை, சமூக நகர்வு என பெரும்பாலான குறியீடுகளில் தொடர்ந்து முதல் மூன்று முதல் ஐந்து இடங்களுக்குள் நீடிக்கிறது.

தமிழ்நாடு ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை மிக விசுவாசமாகப் பின்பற்றியதால் இந்த மாற்றம் ஏற்படவில்லை. மாறாக, அதன் வளர்ச்சிப் பாதை பெரும்பாலும் தேசிய வார்ப்புகளிலிருந்து மாறுபட்டே இருந்தது. திராவிட இயக்கத்துடன் தொடர்புடைய மாநில அளவிலான அரசியல் அணிதிரட்லால் உந்தப்பட்டு, இந்த மாநிலம் சமூகக் கட்டமைப்பிற்கு முன்னுரிமை அளித்தது. வலுவான பொதுச் சுகாதார அமைப்பை உருவாக்குதல், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை விரிவாக்குதல், நலத்திட்டங்கள் மற்றும் மனித மேம்பாட்டில் பெருமளவில் முதலீடு செய்தல் ஆகிய சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தியது. இதற்கு நேர்மாறாக, தனது நிறுவனங்களைச் சீரமைக்காமல், ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வை மட்டுமே பீகார் பெரிதும் நம்பியிருந்தது.

இந்த வேறுபாடு ஓர் அடிப்படைப் படிப்பினையை வழங்குகிறது. உதவி அளிப்பை (Aid) விட, செயல்முனைப்பே (Agency) முக்கியமானது. தமிழ்நாட்டின் முன்னேற்றம் மனித வளம், சமூக நீதி, நிர்வாகத் திறனை வலியுறுத்திய தனித்துவமான மாநில வளர்ச்சி மாதிரி ஆகியவற்றால் ஏற்பட்டது. 1960-களில் இருந்த மிகவும் மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறையே, பீகாரின் ஆழமான கட்டமைப்புப் பற்றாக்குறைகளைத் தீர்க்கக்கூடிய இத்தகையப் புதுமைகளைத் தடுத்திருக்கக் கூடும்.

இணையான சர்வதேசச் சான்றுகள்

சர்வதேச வளர்ச்சி அனுபவங்களும் இதே முடிவையே வலுப்படுத்துகின்றன. பல ஆண்டுகளாக, மூலதனப் பற்றாக்குறையே பொருளாதார வளர்ச்சிக்கான முதன்மைக் கட்டுப்பாடு என்று வளர்ச்சிக் கொள்கைகள் கருதின. எனவே, சர்வதேசக் கொடையாளர்கள் முதலீடு மட்டுமே வளர்ச்சியைத் தூண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஏழை நாடுகளுக்குப் பெருமளவிலான நிதி உதவியை வழங்கினர்.

ஆயினும், வில்லியம் ஈஸ்டர்லியின் வெள்ளையரின் சுமை (The White Man’s Burden, 2006), டம்பிசா மோயோவின் முடிவான உதவி அளிப்பு (Dead Aid, 2009) போன்ற விமர்சனங்கள், இத்தகைய நிதிப் பகிர்வுகள் பெரும்பாலும் நீடித்த வளர்ச்சியை உருவாக்கத் தவறிவிட்டதைக் காட்டுகின்றன. பல சந்தர்ப்பங்களில், பெருமளவிலான நிதி உதவி படைப்பாக்கப்பூர்வமான சமூக மாற்றத்திற்குப் பதிலாக ஊழல், இடைத்தரகர் அரசியல் (Rent-seeking), நீண்டகாலச் சார்பு நிலை ஆகியவற்றையே தூண்டியது.

நிதி ஆதாரங்கள் மட்டுமே மனித வளம், நிர்வாகத் திறன் அல்லது நிறுவனச் சீர்திருத்தத்திற்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. சரியாகச் செயல்படும் நிறுவனங்கள் இல்லாமல் வழங்கப்படும் நிதி என்பது ஓட்டையுள்ள பாத்திரத்தில் ஊற்றப்படும் நீரைப் போன்றது. தென்கொரியா, வியட்நாம் போன்ற விரைவான வளர்ச்சியை எட்டிய நாடுகள், நிரந்தர உதவியால் வளரவில்லை; மாறாகக் கல்வி, பொதுச் சுகாதாரம், நிர்வாகத் திறன், தொழில்துறைகளில் முறையாக முதலீடு செய்ததால் வளர்ந்தன.

இந்தியாவின் சொந்தத் திட்டமிடல் அனுபவமும், இதே படிப்பினையை வழங்குகின்றது. மையப்படுத்துதலும் நிதிப் பகிர்வும் மட்டுமே வாய்ப்புகளைச் சமன் செய்ய முடியுமானால், பல பத்தாண்டுகளாக மையத்தால் வடிவமைக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களும், ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களும் (Centrally Sponsored Schemes) பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திருக்க வேண்டும். ஆனால் அவை அவ்வாறு செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில், ஒரே சீரான திட்டங்கள் உள்ளூர் முன்முயற்சிகளை முடக்கி, நிறுவனப் பலவீனங்களைத் தீர்க்காமல் விட்டுவிட்டன.

ஒரு சிறந்த நிறுவன வடிவமைப்பு

இவை எதுவுமே சமன்படுத்துதல் தேவையற்றது என்று கூறவில்லை. அதிகாரப் பரவலாக்கல் குறித்த விமர்சனம் மிகவும் குறிப்பானது, துல்லியமானது. குறைந்தபட்சப் பலன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், திட்ட வடிவமைப்பு அல்லது அமலாக்கத்தை ஒன்றிய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே வாதிடுகிறது.

முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடுகள் தேசிய உத்தரவாதங்களுக்கும் (National Guarantees), சேவை வழங்கலுக்கும் (Service Delivery) இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ளன. எந்தப் பிராந்தியமும் ஒரு சமூகத் தளத்திற்கு கீழே செல்லாமல் இருப்பதை உறுதி செய்யத் தேசிய அரசுகள் உரிமைகள், அளவுகோல்கள், நிதிப் பகிர்வுகளை உருவாக்கியுள்ளன; அதே நேரத்தில் மாநில அரசுகள் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்தும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இந்த மாதிரி பின்வரும் மூன்று நன்மைகளை வழங்குகிறது: (1) இது தேசியக் குறைந்தபட்சத் தரநிலைகள் மூலம் சமமான குடியுரிமையைப் பாதுகாக்கிறது; (2) பிராந்தியச் சவால்களை எதிர்கொள்ள குறிப்பிட்ட அடிப்படைக்கு மேலேயான பன்முகத்தன்மையை அனுமதிக்கிறது; (3) இது பரிசோதனை முயற்சிகளையும் கற்றலையும் ஊக்குவிக்கிறது.

கட்டளை மூலம் அல்ல, செயல்திறன் மூலமே சமத்துவம் உருப்பெறும்

படிப்பினை தெளிவாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் பெயரில் நியாயப்படுத்தப்படும் மையப்படுத்துதல், கொள்கை அளவில் தவறானது; நடைமுறையில் பயனற்றது. சீரான விதிகள் சீரான விளைவுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. திறன்வாய்ந்த நிறுவனங்கள் வளங்களை மனித மேம்பாடாக மாற்றும் போதுதான் உண்மையான சமத்துவம் உருவாகிறது. சமமான குடியுரிமைக்கு உறுதியளிக்கும் ஒரு கூட்டாட்சி நாடு, நிதி மறுபகிர்வுடன் அதிகாரப் பரவலாக்கப்பட்ட திறன் மேம்பாட்டையும் (Decentralised Capacity-building) இணைக்க வேண்டும். மையப்படுத்துதல் என்பது ஆலோசனை உள்ளீடுகளைச் (Inputs) சமப்படுத்தலாம். ஆனால், அதிகாரப் பரவலாக்கம் பெற்ற மாநிலங்கள் மட்டுமே சமமான விளைவுகளையும் (Equitable Outcomes) உண்மையான வளர்ச்சியையும் உருவாக்க முடியும்.

கட்டுரையாளர் குறிப்பு:

கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு), 

  • இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
  • ன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share