அதிகாரப் பரவலாக்கத்திற்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம்- பகுதி-5

Published On:

| By Mathi

Fedarlism Article

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

“மீள்திறன் சார்ந்த வாதம்: அழுத்தத்தின் போது மையப்படுத்தப்பட்ட அமைப்புகள் ஏன் தோல்வியடைகின்றன”

ADVERTISEMENT

அசோக் வர்தன் ஷெட்டி

திகப்படியான மையப்படுத்துதலுக்கு எதிரான மிகவும் வலுவான வாதம் இக்கால அமைப்புகள் குறித்த கோட்பாட்டிலிருந்து (Systems Theory) வருகிறது. அதீத மையப்படுத்தப்பட்ட தேச அரசு என்பது பொறியாளர்கள் “ஸ்டார் டோபாலஜி” (Star Topology) என்று அழைப்பதைப் போன்றது. அதாவது, அனைத்துப் புள்ளிகளும் ஒரே ஒரு மைய மையத்துடன் (Central Hub) இணைக்கப்பட்ட ஒரு வலைப்பின்னல். இத்தகைய அமைப்புகள் நிலையான சூழலில் திறமையாகச் செயல்படலாம். ஆனால், அவற்றில் ஒற்றைப் புள்ளித் தோல்வி (Single Point of Failure) என்கிற ஓர் அபாயகரமான பலவீனம் உள்ளது. அதாவது, அந்த மையம் பிழை, திறமையின்மை, ஊழல், வெளித் தாக்குதல் அல்லது தகவல் சுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த அமைப்பும் சீர்குலையக்கூடும்.

இதற்கு மாறாக, கூட்டாட்சி முறை என்பது “பரவலாக்கப்பட்ட வலைப்பின்னலாக” (Distributed Network) செயல்படுகிறது. அதிகாரம் பல முனைகளில் பரப்பப்படுகிறது. கட்டமைப்பிலேயே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் (Redundancy) இணைக்கப்பட்டுள்ளன. மேலும், தோல்விகள் அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. ஓர் ஒற்றைக்கல் (Monolithic) போன்ற அமைப்பை முடக்கக்கூடிய அதிர்ச்சிகளை, கூட்டாட்சி அமைப்பு உள்வாங்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். எனவே, கூட்டாட்சி முறை என்பது பிராந்திய பன்முகத்தன்மைக்கான ஓர் அரசியல் ஏற்பாடு மட்டுமல்ல; அது மீள்திறனுக்கான (Resilience) ஒரு கட்டமைப்பு வடிவமைப்புக் கொள்கையும் ஆகும்; “எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது” என்ற பழமொழிக்கு இணங்கிப் போகும் அமைப்பு முறையும் ஆகும்.

பாரனின் பரவலாக்கப்பட்ட வலைப்பின்னல்

ADVERTISEMENT

இந்தக் கருத்தாக்கத்தின் அறிவு சார்ந்த தொடக்கம், அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் உச்சத்தில் இருந்த பனிப்போர் காலத்தில் உள்ளது. அமெரிக்கா ஒரு கடுமையான பலவீனத்தை எதிர்கொண்டது: அதன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் தகவல் தொடர்பு அமைப்பு அதீத மையப்படுத்தப்பட்டதாக இருந்தது. வாஷிங்டன் டி.சி. மீது நடத்தப்படும் ஒரு தாக்குதல், ஒட்டுமொத்த அமைப்பையும் முடக்கிவிடக்கூடும். அத்தகைய தாக்குதலையும் தாங்கிச் செயல்படக்கூடிய ஒரு தகவல் தொடர்பு வலைப்பின்னலை வடிவமைக்கும் பணி RAND கார்ப்பரேஷனின் பொறியாளர் பால் பாரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

1964-ஆம் ஆண்டு வெளியான, தொலைதொடர்புகளைப் பரவலாக்கல் குறித்து (On Distributed Communications) என்கிற அவருடைய முக்கியமான ஆய்வறிக்கையில், பாரன் மையப்படுத்தப்பட்ட “நட்சத்திர வலைப்பின்னல்” முறையை நிராகரித்தார். அதற்குப் பதிலாக, அவர் ஒரு “பரவலாக்கப்பட்ட வலைப்பின்னலை” (Distributed Mesh Network) முன்மொழிந்தார். இது ஒரு மீன்வலை போன்ற அமைப்பு. இதில் ஒவ்வொரு முனையும் பல முனைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். எந்த ஒரு முனையும் அத்தியாவசியமானது அல்ல. ஒரு முனை அழிக்கப்பட்டாலும், செய்திகள் பிற முனைகள் வழியாகத் தடைகளைத் தாண்டிச் சென்றடையும்.

ADVERTISEMENT

இந்தக் கட்டமைப்பே அர்பாநெட் (ARPANET) உருவாவதற்கான வரைபடமாக அமைந்தது. இதுவே இறுதியில் இணையமாக (Internet) பரிணமித்தது. இணையம் ஒரு வலுவான மையத்தைக் கொண்டிருப்பதால் செயல்படவில்லை. மாறாக, அதற்கு மையம் என்று எதுவுமே இல்லை என்பதால்தான் செயல்படுகிறது. இது பகிரப்பட்ட நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படும் தன்னாட்சி வலைப்பின்னல்களின் ஒரு கூட்டமைப்பு ஆகும். இந்தப் படிப்பினை தொலைத்தொடர்புக்கும் அப்பால் நீள்கிறது. இந்தியா போன்ற ஒரு கண்டம் அளவிலான நாட்டின் இருப்புக்கும் நீண்டகால மீள்திறனுக்கும், அதிகாரம் ஒரே மையத்தில் குவியாமல் பல முனைகளில் பரப்பப்பட்ட ஒரு மீன்வலை போன்ற ஆட்சிமுறை கட்டமைப்பு அவசியம் ஆகும்.

பெரோவின் இறுக்கமான பிணைப்பு அமைப்புகள்

நார்மல் ஆக்சிடென்ட்ஸ் (1984) என்கிற புகழ்பெற்ற நூலில், இந்த நுண்ணறிவை சமூகவியலாளர் சார்லஸ் பெரோ மேலும் ஆழப்படுத்தினார். இறுக்கமான பிணைப்பு கொண்ட அமைப்புகளில் (Tightly Coupled Systems) — அதாவது தாமதம், விருப்ப அதிகாரம் அல்லது திருத்தங்களுக்கு இடமில்லாமல் பாகங்கள் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள அமைப்புகளில் — தோல்விகள் என்பவை விதிவிலக்குகள் அல்ல. அவற்றின் சிக்கலான தன்மையின் தவிர்க்க முடியாத விளைவுகளே என்று பெரோ வாதிட்டார். இத்தகைய அமைப்பில் ஒரு தோல்வி ஏற்படும்போது, சிறிய பிழைகள் முழு கட்டமைப்பிலும் வேகமாகப் பரவி, ஒரு தொடர் சரிவாக (Cascading Breakdown) மாறுகின்றன.

அதீத மையப்படுத்தப்பட்ட ஓர் அரசும், இத்தகைய அமைப்பைப் போன்றதே. அதிகாரம், வளங்கள், முடிவெடுத்தல் ஆகியவை ஓரிடத்தில் குவியும்போது, ஒரு சாதாரண நிர்வாகப் பிழை கூட — தாமதமான நிதி விடுவிப்பு, தவறான வழிகாட்டுதல் அல்லது தரவுப் பிழை — ஒரே நேரத்தில் பல பகுதிகளின் செயல்பாடுகளைத் துரிதமாகப் பாதிக்கக்கூடும்.

அதிகாரப் பரவலாக்கல் இந்த இறுக்கமான பிணைப்பைத் தளர்த்துகிறது. இது ஒரு மின்சுற்று உடைப்பானை (Circuit Breaker) போலச் செயல்பட்டு, தவறுகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்துகிறது. ஒரு மாநிலம் தவறான கொள்கையைப் பின்பற்றினால், அதன் பாதிப்பு அந்த மாநில அளவிலேயே இருக்கும். அது ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்காது. பொறியியல், நிதி, நிறுவன வடிவமைப்பு என மீள்திறன் கொண்ட அனைத்து அமைப்புகளிலும் இந்த அபாயப் பகிர்வு (Compartmentalisation of Risk) ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

எளிமையாகச் சொன்னால்:

  • இறுக்கமான பிணைப்பு (மையப்படுத்துதல்): உள்ளூர் தோல்விகள் தேசிய நெருக்கடிகளாக மாறுகின்றன.
  • தளர்வான பிணைப்பு (அதிகாரப் பரவலாக்கல்): தோல்விகள் உள்ளூர் அளவிலேயே முடிந்துவிடுகின்றன. அவற்றை எளிதாகக் கையாள முடியும்.

இராணுவக் கோட்பாட்டிலிருந்து பாடங்கள்

இதே தர்க்கம் நவீன இராணுவக் கோட்பாட்டிலும் காணப்படுகிறது. பிரஷ்யக் கருத்தாக்கமான ஆஃப்ட்ராக்ஸ்டாக்டிக் (Auftragstaktik) அல்லது மிஷன் கமாண்ட் (mission command) என்பது, போர்க்களத்தின் நிச்சயமற்ற சூழலில் மையப்படுத்தப்பட்ட நுண்-நிர்வாகம் (Micromanagement) சாத்தியமற்றது என்ற அங்கீகாரத்திலிருந்து பிறந்தது.

போர்க்களத்தின் ஒவ்வொரு சூழலுக்கும் விரிவான உத்தரவுகளை வழங்குவதற்குப் பதிலாக, தளபதிகள் இலக்கை, அதாவது தளபதியின் நோக்கத்தை மட்டும் தெரிவிக்கின்றனர்; செயல்படும் அதிகாரத்தைக் கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். களத்தில் உள்ள பிரிவுகள் ஒட்டுமொத்த இலக்கிலிருந்து விலகாமல், உள்ளூர் சூழலுக்கு ஏற்பத் தந்திரங்களை மாற்றியமைக்கின்றன. இந்த அதிகாரப் பரவலாக்கப்பட்ட கட்டமைப்பு, மையக் கட்டளை அமைப்புடனான தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் இராணுவப் பிரிவுகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்கிறது.

குடிமை ஆட்சிமுறையும் இதேபோன்ற சிக்கலான சூழலில்தான் இயங்குகிறது. புதுதில்லியில் இருக்கும் ஒரு பிரதமர் வெள்ளம், தொற்றுநோய் அல்லது பயிர்ச் சேதத்தை எதிர்கொள்ளும் ஒரு மாவட்ட ஆட்சியரை, போர்க்களத்தில் ஒரு ஜெனரல் ஒவ்வொரு பிளாட்டூனையும் வழிநடத்த முடியாதது போலவே, நுண்-நிர்வாகம் செய்ய முடியாது. அதிகாரப் பரவலாக்கல் என்பது, மைய அதிகாரிகள் பணிச்சுமையால் திகைக்கும்போது அல்லது தற்காலிகமாகச் செயல்பட முடியாமல் போகும்போதும் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதை அனுமதிக்கிறது.

தலேப் என்பவருடைய நொறுங்கிப் போகாத தன்மை என்கிற கருத்தாக்கம்

நாசிம் நிக்கோலஸ் தலேப், “நொறுங்கிப் போகாத தன்மை” என்ற தனது கருத்தாக்கத்தின் மூலம் இந்த வாதத்தை மேலும் விரிவுபடுத்தினார். இதனை “நொறுங்கிப் போகாத தன்மை: சீர்குலைவிலிருந்து பெற்ற விஷயங்கள்” (Antifragile: Things That Gain from Disorder, 2012) என்கிற நூலில் விரிவாகக் கூறியுள்ளார். ஒரு மீள்திறன் கொண்ட அமைப்பு (Resilient System) அதிர்ச்சிகளைத் தாங்கி மீண்டும் சமநிலைக்குத் திரும்பும். ஆனால் ஒரு நொறுங்கிப் போகாத அமைப்பு அதையும் தாண்டிச் செல்லும். அது அழுத்தம் மற்றும் ஏற்ற இறக்கங்களால் தன்னை மேம்படுத்திக் கொள்ளும்.

மையப்படுத்தப்பட்ட அமைப்புகள் பெரும்பாலும் நொறுங்கிப் போகக் கூடியவை (Fragile) என்று தலேப் வாதிடுகிறார். கட்டுப்பாட்டையும் ஒருசீரான தன்மையையும் பேணும் முயற்சியில், அவை பல்வகைமையை நசுக்கி, சிறிய தோல்விகளை நீக்குகின்றன. காலப்போக்கில், நிலைத்தன்மை போன்ற தோற்றத்திற்கு அடியில் மறைமுகமான அபாயங்கள் குவிந்து, இறுதியில் அவை பேரழிவாக வெடிக்கின்றன.

அதிகாரப் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் வேறுவிதமாகச் செயல்படுகின்றன. உள்ளூர் மாற்றங்களையும் பரிசோதனைகளையும் அனுமதிப்பதன் மூலம், அவை சிறிய தோல்விகளை அடிக்கடி, ஆனால் பாதிப்பில்லாமல் நடக்க அனுமதிக்கின்றன. ஒவ்வொரு தோல்வியும் கற்றலையும், மாற்றத்தையும், நிறுவன மேம்பாட்டையும் உருவாக்குகிறது.

எனவே, கூட்டாட்சி அமைப்புகள் நொறுங்கிப் போகாத நிலைக்கு நெருக்கமானவை. கொள்கைப் பிழைகள் உள்ளூர் அளவிலேயே நிற்கின்றன; வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் பரவுகின்றன; தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அமைப்பு பரிணமிக்கிறது. சுவிட்சர்லாந்தின் கேண்டனல் (Cantonal) முறை போன்ற பரவலாக்கப்பட்ட ஆட்சிமுறைகளை இத்தகைய மேன்மையான ஆட்சிமுறைக்கு உதாரணமாக தலேப் அடிக்கடி குறிப்பிடுவார்.

ஓர் இந்திய உதாரணம்

மையப்படுத்துதல் எவ்வாறு ஓர் அமைப்பின் அபாயத்தைப் பெருக்கும் என்பதற்கு அண்மைக்கால உதாரணம் தேசிய தேர்வு முகமை (National Testing Agency, NTA) ஆகும். இது 2018 முதல் பல முக்கியமான தேசிய நுழைவுத் தேர்வுகளை மையப்படுத்தியுள்ளது. 2024-இல், நீட்-யுஜி (NEET-UG) தேர்வு பல மாநிலங்களில் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்டது; யுஜிசி-நெட் (UGC-NET) பாதுகாப்பு மீறலால் இரத்து செய்யப்பட வேண்டியிருந்தது; சியுஇடி (CUET) முடிவுகள் தொடர் தாமதங்களால் பாதிக்கப்பட்டன. கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (371-வது அறிக்கை, 2025), தேசிய தேர்வு முகமை  நடத்திய 14 தேர்வுகளில் குறைந்தது ஐந்தில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாக முடிவு செய்தது. இத்தகைய மையப்படுத்துதலில் உள்ள அபாயங்களை உணர்ந்து, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் ஜோசப் குழு, தேசிய தேர்வு முகமையைக் கலைக்கவும், நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை 2018-க்கு முன்பு இருந்த அந்தந்த முகமைகளிடமே மீண்டும் ஒப்படைக்கவும் பரிந்துரைத்து உள்ளது.

படிப்பினை

இவ்வாறு, மீள்திறன் சார்ந்த வாதம் ஒரு நுட்பமான பின்வரும் உண்மையை உணர்த்துகிறது: அதீத வலிமையான ஒரு மையம், பலவீனமான ஒரு தேசத்தையே உருவாக்கும். கண்டம் அளவிலான பரப்பளவும் பன்முகத்தன்மையும் கொண்ட இந்தியாவை, “நட்சத்திர வலைப்பின்னல்” போன்ற ஆட்சி முறை நிர்வகிக்க உகந்தது அல்ல. மாறாக, நிதி, நிர்வாகம், முடிவெடுக்கும் திறன் கொண்ட மாநிலங்களை அதிகாரமிக்க முனைகளாகக் கொண்ட “பரவலாக்கப்பட்ட வலைப்பின்னல்” (Distributed Mesh) போல இந்தியா இயங்க வேண்டும். இந்த வகையில், கூட்டாட்சி என்பது ஒரு காப்பீடு போன்றது. இது ஒரு முனை தோல்வியடையும் போது ஒட்டுமொத்த அமைப்பும் வீழாமல் இருப்பதை உறுதி செய்கிறது; ஓர் அதிகாரம் தடுமாறினாலும் மற்றவை தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்துகிறது.(தொடரும்)

கட்டுரையாளர் குறிப்பு:

கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு), 

  • இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
  • ன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share