”திறமையின்மை குறித்த போலிவாதம்: ஒன்றியத்தின் அவநம்பிக்கை எவ்வாறு மாநிலங்களைப் பலவீனப்படுத்துகிறது”
அசோக் வர்தன் ஷெட்டி
இந்தியாவில் மையப்படுத்தலுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படும் வாதம், திறமையின்மை குறித்த வாதம் ஆகும். மாநில அரசாங்கங்கள் முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றும் அளவுக்கு நிர்வாக அல்லது தொழில்நுட்பத் திறன் இல்லை என்று கூறப்படுகின்றது. எனவே, மாநிலங்களுக்கு மாற்றாக, ஒன்றியத்தின் நெருக்கமான மேற்பார்வை தேவைப்படுகிறது என்று வாதிடப்படுகின்றது. பெரும்பாலும் ‘நடைமுறை எதார்த்தம்’ என்று வேடமிட்டு வரும் இந்த வாதம், தத்துவ ரீதியாகப் பிழையானது மட்டுமல்ல, நிறுவன ரீதியாகத் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இது ‘திறன்’ என்பது எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுவதுடன், தான் குணப்படுத்த முயலும் அதே பலவீனத்தை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்கிறது.

இந்திய மாநிலங்கள் என்பவை ஏதோ சிறிய நிர்வாக அலகுகள் அல்ல. மக்கள் தொகை, பொருளாதாரப் பன்முகத்தன்மை, நிர்வாகச் சிக்கல்கள் ஆகியவற்றில் அவை உலகின் முன்னணி நாடுகளுக்கு இணையானவை. மகாராஷ்டிராவின் மக்கள் தொகை ஜப்பானுக்கு நிகரானது; தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஜெர்மனிக்கு இணையானது; கர்நாடகம், பிரான்சுக்கு நிகரானது. உத்தரப்பிரதேசம் ஒரு தனி நாடாக இருந்தால், அது உலகின் ஐந்தாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான நிலப்பரப்புகளை ஆளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்குக் கல்வி, சுகாதாரம், விவசாயம், ஊரக வளர்ச்சி அல்லது நகர நிர்வாகத்தை நிர்வகிக்க இயல்பாகவே திறன் இல்லை என்று கூறுவதும், அதன் காரணமாக ஒன்றியத்தின் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்கள், மையப்படுத்தப்பட்ட திட்டங்கள் தேவை என்று வாதிடுவதும், இந்தியர்கள் இயல்பாகவே ஜப்பானியர்களையோ அல்லது ஐரோப்பியர்களையோ விட சுயராஜ்யத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று கூறுவதற்குச் சமம். இது தேசத்தின் சுயமரியாதைக்குப் பொருந்தாத ஒரு கருத்து; எந்தவொரு தேசபக்தரும் சகித்துக்கொள்ள முடியாத அவதூறு.

இத்தகைய தந்தைவழி மேலாதிக்கப் போக்கிற்கான (Paternalism) தத்துவ நோக்கிலான மறுப்பு இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் போதே உருவானது. பிரிட்டிஷார் தங்களின் ஏகாதிபத்திய ஆட்சியைத் திறமை, நிர்வாகத் திறன் என்கிற பெயரிலேயே நியாயப்படுத்தினர். மகாத்மா காந்தி அந்தத் தர்க்கத்தை நிராகரித்தார்; நல்ல அரசாங்கம் என்பது சுயாட்சிக்கு (Self-government) மாற்றாகாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவரது வாதம் அறம் சார்ந்தது மட்டுமல்ல, நிர்வாகம் சார்ந்ததும்கூட: அரசியல் கண்ணியம், குடிமை முதிர்ச்சி, நிறுவன வளர்ச்சி ஆகியவை பொறுப்புகளை ஏற்பதன் மூலமே உருவாகின்றன. தொலைதூரத்திலிருந்து திணிக்கப்படும் நிர்வாகம் எவ்வளவு திறமையானதாக இருந்தாலும், அது சுயாட்சியிலிருந்து உருவாகும் ஜனநாயக முதிர்ச்சிக்கு ஈடாகாது. இதே நோக்கு, ஒன்றிய-மாநில உறவுகளுக்கும் பொருந்தும். தொலைதூரமான புது தில்லியிலிருந்து வடிவமைக்கப்பட்ட திறன்வாய்ந்த சரியான கொள்கைகூட, விளைவுகளுக்கு அரசியல் அளவில் பொறுப்பேற்கும் மாநிலங்களால் உருவாக்கப்படும், செயல்படுத்தப்படும் கொள்கைகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. மாநிலங்களுக்கு இந்தச் சுயாட்சியை மறுப்பது என்பது, மாநிலங்களைச் சமமான பங்காளிகளாகக் கருதாமல், அவர்களைச் சார்ந்திருப்பவர்களாகக் கருதும் காலனிய மனப்பான்மையைத் தொடர்வதே ஆகும்.

திறன் என்பது வழங்கப்படுவதல்ல, கட்டமைக்கப்படுவது
மாநிலங்களின் திறமையின்மை குறித்த வாதம் ஓர் அடிப்படைத் தவறான புரிதலிலிருந்து தொடங்குகிறது. அதாவது, பொறுப்பை ஏற்கும் முன்னரே திறன் இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்யப்படுகிறது. உண்மையில், பொறுப்பே திறனை உருவாக்குகிறது. மாநிலங்கள் பலவீனமாக உள்ளன; எனவே ஒன்றியத்தின் தலையீடு தேவை என்று அதிகாரக் குவிப்பு ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், மாநிலங்கள் வலிமையடைவதைத் தடுத்து, அவர்களைச் சார்ந்திருக்கும் நச்சுச் சூழலை உருவாக்குவதே இந்தத் தலையீடுதான்.
தனிநபர் அல்லது நிறுவனத்தின் திறன் என்பது மரபுவழியாகப் பெறப்படுவது அல்ல; அது பயிற்சியின் மூலம் கட்டமைக்கப்படுவது. பிள்ளைகளுக்கு ஒருபோதும் பொறுப்புகளை வழங்காத பெற்றோர்கள், அவர்களை நிரந்தரமாகச் சார்ந்திருப்பவர்களாக மாற்றுகிறார்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்க மறுக்கும் தலைமை, பலவீனமான ஆபத்துக்களை எதிர்கொள்ள அஞ்சும் கீழ்நிலை அதிகாரிகளையே உருவாக்குகிறது. அரசாங்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பொறுப்பு, பொறுப்புக்கூறல், தவறுகள் ஆகியவற்றைச் செய்யவும், அவற்றைச் சரிசெய்யவும் வழங்கப்பட்ட சுதந்திரத்திலிருந்தே செயல்திறன் பிறக்கிறது.

இந்த நோக்கை, நோபல் பரிசு பெற்ற கென்னத் ஜே. ஆரோ (Kenneth J. Arrow), தனது “பணியாற்றுவதன் வழியாகக் கற்றுக்கொள்வதின் பொருளாதாரத் தாக்கங்கள்” ஆய்வுக் கட்டுரையில் (The Economic Implications of Learning by Doing (Review of Economic Studies, 1962)) முறைப்படுத்தினார். உற்பத்தித் திறனும் ஆளுமையும் நிலையான பண்புகள் அல்ல, அவை தொடர்ச்சியான அனுபவத்தின் விளைவுகள் என்று அவர் நிரூபித்தார். ஒரு செயலைச் செய்வதன் மூலமே திறமை கைவரப் பெறுகிறது. இதைக் கூட்டாட்சி முறைக்குப் பொருத்தினால், நிர்வாகத் திறனை ஒன்றியம் மாநிலங்களுக்கு வழங்க முடியாது; அது மாநிலங்களால் உண்மையான முடிவெடுக்கும் அதிகாரம், சோதனைகள், அனுபவங்கள், திருத்தங்கள் ஆகியவற்றின் மூலம் உருப்பெற வேண்டும். மாநிலங்கள் வெறுமனே நடைமுறைப்படுத்தும் முகமைகளாக மாற்றப்படும்போது, இந்த கற்றல் சுழற்சி நின்றுபோய் விடுகிறது. மாநிலங்களின் திட்டமிடல் நிபுணத்துவம், கொள்கை உருவாக்கும் திறன் சிதைந்து, அதற்குப் பதிலாகப் புது தில்லியின் ‘வழிகாட்டுதல்களுக்காக’க் காத்திருக்கும் ஓர் அடிமைத்தனமான பண்பாடு உருவாகிறது.

நிறுவனக் கோட்பாட்டிலிருந்து சில படிப்பினைகள்
றுவனக் கோட்பாடும் (Organisation theory) இந்த முடிவையே உறுதிப்படுத்துகிறது. ஆல்ஃபிரட் சாண்ட்லர் (Alfred Chandler) எழுதிய உத்தி வகுப்பும் கட்டமைப்பும் (Strategy and Structure, 1962) என்கிற ஆய்வு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டுபாண்ட் போன்ற தொழில்துறை ஜாம்பவான்கள் மிகக் கடுமையான அதிகாரக் குவிப்பு கொண்ட ஒற்றையாட்சி (U-form) அமைப்புகளாக இருந்தபோது எவ்வாறு தடுமாறின என்பதைக் காட்டியது. தலைமையகம் அன்றாட நிர்வாக நுணுக்கங்களில் மூழ்கியதால், உத்தி வகுப்பு முடிவுகளை எடுக்க முடியாமல் முடங்கியது. ஊக்கமளிக்கும் அமைப்பு என்கிற வகையில், இந்த நிறுவனங்கள் தங்களின் கிளைகளுக்கு செயல்பாட்டுச் சுயாட்சியை (M-form structure) வழங்கிய பின்னரே பிழைத்துக்கொண்டன. அதாவது, தலைமையகம் உத்தி வகுப்பு, மூலதன ஒதுக்கீட்டில் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் பிரிவுகளுக்கு கணிசமான செயல்பாட்டு சுயாட்சி வழங்கப்பட்டது.
இதுதொடர்பில், இந்தியக் கூட்டாட்சி முறையுடன் உள்ள ஒற்றுமை வியக்கத்தக்கது. ஒன்றியம் இன்றும், சாண்ட்லர் சொல்வதுபோல, ஓர் ஒற்றையாட்சி (U-form) அமைப்பைப் போலவே நடந்துகொள்கிறது; 28 பன்முகத்தன்மை கொண்ட மாநிலங்களின் அன்றாடச் செயல்பாடுகளை நுணுக்கமாக மேலாண்மை செய்ய முயல்கிறது. இதன் விளைவாக, மையத்தில் அதிகாரச் சுமையும், விளிம்புகளில் அதிகாரச் சிதைவும் ஏற்படுகிறது.

இந்த ஆபத்தை, கார்ப்பரேஷன் குறித்த கருத்தாக்கம் (Concept of the Corporation, 1946) என்கிற ஆய்வில் பீட்டர் டிரக்கர் மிகச் சுருக்கமாகக் கூறினார்:
“வலுவான மத்திய தலைமை இல்லாமல் எந்த நிறுவனமும் ஒருங்கிணைய முடியாது; ஆனால், சுயமாகப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் வலுவான, தன்னாட்சி பெற்ற உள்ளூர் தலைமை இல்லாமல் எந்த நிறுவனமும் சரியாகச் செயல்பட முடியாது… ஒவ்வொரு பெரிய அளவிலான நிறுவனத்திலும், முன்முயற்சிகளை முடக்கி, கீழ்ப்படிதலை ஊக்குவிக்கும் இயல்பான போக்கு உள்ளது.”
மிதமிஞ்சிய அதிகாரக் குவிப்பு முன்முயற்சிகளை நசுக்கி, மேலிட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு மட்டுமே வெகுமதி அளிக்கிறது. இது சிக்கலான நிர்வாகத் தேவைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

ஓர் சர்வதேச ஒப்பீடு: சீனா
சூ செங்காங் (Xu Chenggang) போன்ற ஆய்வாளர்கள், சீனாவின் ஆட்சி முறையை “பிராந்திய அளவில் பரவலாக்கப்பட்ட அடக்குமுறை ஆட்சி” (Regionally Decentralized Authoritarianism, Journal of Economic Literature, 2011) என்று அழைக்கின்றனர். அங்கே அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டிருந்தாலும், பொருளாதார நிர்வாகம் வியக்கத்தக்க வகையில் பரவலாக்கப்பட்டுள்ளது. நிலப் பயன்பாடு, தொழில்துறைக் கொள்கை, முதலீட்டு வசதிகள் ஆகியவற்றில் மாகாண, உள்ளூர் அரசாங்கங்களுக்குப் பெரிய அளவில் சுயாட்சி உள்ளது. 1978 சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிகாரப் பரவலாக்கம் மாகாணங்களுக்கிடையே கடும் போட்டியை உருவாக்கியது. இது உள்ளூர் அரசாங்கங்களை நிர்வாகத் திறனை வளர்த்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தியது. சீனாவின் வளர்ச்சிக்குப் பல காரணிகள் பங்களித்திருந்தாலும், பரவலாக்கப்பட்ட இந்தப் பொருளாதார சுயாட்சியே முக்கியமான காரணம்.
இந்த உதாரணத்தின் முக்கியத்துவம் சீன பாணி அடக்குமுறை ஆட்சியை ஆதரிப்பதற்கு அல்ல. மாறாக, ஒரு முரணான உண்மையை வெளிப்படுத்துவதற்கு ஆகும். அரசியல் பன்முகத்தன்மையைச் சந்தேகத்துடன் பார்க்கும் ஓர் ஆட்சிமுறை கூட, அதன் கீழ்நிலை அரசாங்கங்களுக்குப் பொருளாதார அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையின் அடிப்படையில் அமைந்த ஓர் அரசமைப்பு ஜனநாயகமான இந்தியா, தனது சொந்த மாநிலங்களுக்கு இத்தகைய சுயாட்சியை வழங்கவே முடியாது என்ற அனுமானத்தில் செயல்படுகிறது.
சார்ந்திருத்தல் என்னும் நச்சுச் சூழல் வட்டம்
மாநிலங்களுக்கு உண்மையான அதிகாரம், ஊக்கம், பொறுப்புடைமை ஆகியவை வழங்கப்படும்போது, அவற்றைப் பயன்படுத்துவதற்கான திறனை வளர்த்துக்கொள்ள அவை கட்டாயப்படுத்தப்படுகின்றன. ஒன்றியம் மாநிலங்கள் மீது நம்பிக்கை வைக்க மறுக்கும்போது, அது மாநிலங்கள் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குகிறது. இதன் பிறகு அந்தச் சார்ந்திருக்கும் நிலையையே கூடுதலான கட்டுப்பாடு செலுத்துவதற்கான காரணமாகக் காட்டப்படுகிறது. இவ்வாறாக, மாநிலங்களின் திறமையின்மை குறித்த வாதம் தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொள்கிறது. அரசமைப்புச் சட்டப் பங்காளிகளை, நிர்வாக அளவில் சார்ந்திருப்பவர்களாக மாற்றும் ஓர் ஒன்றியம், மாநிலங்களை மட்டுமல்ல, குடியரசையே பலவீனப்படுத்துகிறது.
கட்டுரையாளர் குறிப்பு:

கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு),
- இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
- ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.
