திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு FASTag கட்டாயமாக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி எழுமலையானை தரிசிக்க நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பக்தர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, கூட்ட நெரிசலைத் தடுப்பது மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காக வரும் ஆகஸ்ட் 15 முதல் அலிப்பிரி சோதனைச் சாவடியில் பாஸ்டேக் கட்டாயம் என்று கூறியுள்ளது.
பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இனி திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. பாஸ்டேக் இல்லாதவர்களுக்காக ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி சோதனைச் சாவடியில் FASTag வழங்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் நடவடிக்கைக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகமாகிறது. ஒருமுறை ரூ3000 செலுத்தி, இந்த சந்தாவை பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம் அல்லது ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.