”ரூ.400 கோடி எங்கே? இழப்பீடு கொடுக்காமல் விவசாயிகளை இழுத்தடிப்பது நியாயமா?” – பெ.சண்முகம் கேள்வி!

Published On:

| By Minnambalam Desk

farmers without paying compensation for 45 years - Pe. Shanmugam

”பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் கடந்த 45 ஆண்டுகளாக இப்படி காக்க வைப்பது நியாயமா?” என பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டு விவசாயிகளிடம் நிலத்தைக் கையகப்படுத்தியது.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் உள்ள வடவள்ளி, சோமையாம்பாளையம், பொம்மன் பாளையம், கல்வீரம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 600 விவசாயிகளிடம் இருந்து 926 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு தொகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் விவசாயிகள் தங்களுக்குக் கிடைத்த இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என்று தெரிவித்து இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT

ஆனால் அரசு அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதைத் தொடர்ந்து நியாயமான இழப்பீடு பெறுவதற்காகப் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் 25 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 2007 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் 160 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் முழு இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு முன்வரவில்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு பலமுறை அரசிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அரசு கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் கடந்த 2022ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் விவசாயிகள் 15 சதவிகிதம் வட்டி வழங்க வேண்டும் என்று கோரிய நிலையில் 9 சதவிகிதம் வட்டியுடன் சேர்த்து சுமார் 400 கோடியை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ஆனால் நீதிமன்றம் அறிவுறுத்தியும் உரிய இழப்பீடு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வரும் நிலையில் இழப்பீட்டை வழங்க கோரி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விவசாயிகளைக் காக்க வைப்பது நியாயமா?

அப்போது சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த 2022 நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு வந்தவுடன் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியையும், முதல்வரையும் நேரில் சந்தித்து தெரிவித்தோம்.

மூன்று ஆண்டுகள் ஆன பின்னும் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 45 ஆண்டுகளாக இழப்பீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளை இப்படி காக்க வைப்பது நியாயமா?அரசு இழப்பீடு கொடுக்கவில்லை எனில் அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது என்றால், பயன்படுத்திய நிலத்தை தவிர மிச்சம் இருக்கின்ற நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகள் சங்கத்திடம் ஒப்படையுங்கள்” என்றார்.

பணமே கொடுக்க வேண்டாம்!

நீங்கள் பணமே கொடுக்க வேண்டாம். 928 ஏக்கரில் 300 முதல் 400 ஏக்கர் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது, சுமார் 600 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் மார்க்கெட் விலையில் அதை பயன்படுத்திக் கொள்வோம்.

பணத்தை கொடுங்கள் அல்லது நிலத்தைக் கொடுங்கள் என்று கேட்கிறோம் .விவசாயிகளைக் காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல, இழப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் தொடரும்” என்றார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியருடன் பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக இரண்டு கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ள நிலையில் உயர் கல்வித் துறை செயலாளர்தான் இனிமேல் முடிவு எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்பது தெரியும் . இது 400 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை.

உயர் கல்வித்துறை அமைச்சர் , உயர் கல்வித்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர் , நிதித்துறை செயலாளர் கொண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சென்னையில் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்து தேதியை அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக உயர்கல்வி துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளரிடம் பேசி தேதியை அறிவித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என சண்முகம் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share