சஞ்சய் கே. ஜா
ஆடம்பரமான அடுக்குமொழிகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், ஒரு பிரதமர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால், நீங்கள் ‘மோடி என்னும் நிகழ்வை’ இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
பகட்டு அல்லது மிகை (Hype) என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலின் தாரக மந்திரம். மோடி தில்லி அரியணையில் ஏறினால் போதும், அரசியலை ஆட்கொண்டுள்ள அனைத்து நோய்களும் தீர்ந்துவிடும்; அனைவருக்கும் ‘அச்சே தின்’ (நல்ல காலம்) பிறக்கும் என்றும் நமக்குச் சொல்லப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கறுப்புப் பணம், பயங்கரவாத நிதி, கள்ள நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்பட்டது.

‘மேக்-இன்-இந்தியா’ திட்டம் உற்பத்திப் புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் “புனித செங்கோல்” நிறுவப்பட்டது, ஞானத்தையும் நீதியையும் அலைகளெனப் பாய்ச்சும் என்று விதியால் தீர்மானிக்கப்பட்டது. கும்பமேளாவுக்குப் பிந்தைய “புதிய விழிப்புணர்வு” அடிமை மனநிலையை உடைத்து, வரும் நூற்றாண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையின் “புனித தருணம்” நாட்டை “தெய்வீக பாரதம்” எனும் புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்டது. இந்தக் கற்பனைகள் எல்லை மீறிச் சென்று, மோடியை “விஸ்வகுரு”வாக உலகின் உச்சியில் நிறுத்தின.
மோடி மிகைப்படுத்தப்பட்ட சொற்களின் வித்தைக்காரர். அவரது வசீகரிக்கும் கதையாடல்கள் மக்களின் வாழ்விலிருந்து விரக்தியை உண்மையிலேயே விரட்டியடித்ததா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அந்த மக்கள்தான். ராமர் கோயிலில் ‘தர்ம துவஜம்’ (அறத்தின் புனிதக் கொடி) ஏற்றப்பட்ட புனித தருணத்தில் மோடி நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், மீண்டும் ஒருமுறை அடுக்குமொழிகளின் ஆலங்கட்டி மழை பொழிந்தது. “இன்று உலகம் முழுவதும் ராம மயம்” என்று பிரதமர் அறிவித்தார். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவோ, ஏன் உத்தரப் பிரதேசமோகூட, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வைப் பற்றிச் சரிவர அறிந்திருக்கவில்லை என்பது அவருக்குத் தெரியவில்லை போலும்.

ஆளும் வர்க்கம் ராமபிரானிடமிருந்து உத்வேகம் பெற்று, அவரது லட்சியங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “சத்தியத்தில்தான் தர்மம் நிலைபெற்றுள்ளது” என்றார்.
ராமர் என்பது நீதி, தியாகம் ஆகியவற்றின் அடையாளம் என்றார். மோடி இயந்திரம் இறுதியாக தனது பாதையை மாற்றி, இறைவன் காட்டிய பாதையில் பயணிக்கும் என்று நாடு எதிர்பார்க்கலாமா? பிரதமர் தனது “தம்பி” என்று அழைத்த பாகேஸ்வர் தாம் “பாபா” தீரேந்திர சாஸ்திரி போன்றவர்களால் மோடி இனி வழிநடத்தப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. ராம்தேவ் போலக் காவி உடை அணிந்த சாமியார்களை விடுங்கள், மோடி இனி ராமரை மட்டுமே பின்பற்றுவார். சத்தியத்திலும் ஒழுக்கத்திலும் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என்று அவர் சபதமேற்றுள்ளார்.
நன்றி மோடி ஜி. யாருக்காவது உண்மையான புகார் இருந்தால், இப்போது பிரதமரை அணுகுங்கள். ஒரு சாதாரண மனிதனின் சிறு சந்தேகத்திற்குப் பதில் அளிக்கும் விதமாக, தூய்மையின் அடையாளமான சீதையைத் தனது ராஜ்ஜியத்தை விட்டே வெளியேற்றிய ராமபிரானைப் போலவே, மோடியும் நேர்மையின் மிக உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துவார். ராகுல் காந்தி, தெருக்களில் நின்று “வாக்குத் திருட்டு” என்று கத்துவதை நிறுத்துங்கள். மோடியிடம் செல்லுங்கள், உங்களுக்கு நீதி கிடைக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கைவிரித்தால் என்ன? பிரதமர் காப்பாற்றுவார். செங்கோல், கும்பமேளா, அயோத்திக்குப் பிந்தைய விழிப்புணர்வு இந்தியாவை வழிநடத்துகிறது என்பதை ஒரு பணிவான கடிதத்தின் மூலம் அவருக்கு நினைவுபடுத்துங்கள். பிரதமர் அதிகாரத்தின் மீதான நிர்வாணப் பசியால் உந்தப்பட்ட ஒரு அரசியல்வாதியாக அல்லாமல், “ராமரின் கொள்கைகளின்” உணர்வோடு பதிலளிப்பார் என்ற மெல்லிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம்.

அரசியலமைப்பு நாள்
இந்திய அரசியலமைப்பின் பிரதியை யானை சுமந்து வரும் ஒரு ஊர்வலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் நடந்து செல்வதை கற்பனை செய்து பாருங்கள்! அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்ட ஒரு அரசியல்வாதி இதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்? அரசியலமைப்பிற்கு இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த மரியாதை இது என்பதில் சந்தேகமே இல்லையல்லவா? நினைவில் கொள்ளுங்கள், அது கம்பீரமான யானை, முயல் அல்ல.
நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினத்தில் குடிமக்களுக்கு விடுத்த செய்தியில் மோடி நினைவுகூர்ந்தார்: “எனது எண்ணங்கள் 2010ஆம் ஆண்டிற்குப் பின்னோக்கிச் செல்கின்றன. அரசியலமைப்பு 60 ஆண்டுகளை நிறைவு செய்த சமயம் அது. துரதிர்ஷ்டவசமாக, அந்தத் தருணம் தேசிய அளவில் அதற்கு உரிய கவனத்தைப் பெறவில்லை. ஆனால், அரசியலமைப்பின் மீதான எங்களது நன்றியையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்த, குஜராத்தில் ‘சம்விதான் கௌரவ் யாத்திரை’யை நடத்தினோம். நமது அரசியலமைப்பு ஒரு யானையின் மீது வைக்கப்பட்டது, மேலும் நானும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரும் அந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பெருமையைப் பெற்றோம்.”
பிரதமர் தொடர்ந்தார்: “2014இல் நான் முதல்முறை நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயிலின் படிகளைத் தொட்டு வணங்கிய தருணங்களை இப்போதும் நினைவில் கொள்கிறேன். மீண்டும் 2019-ல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சம்விதான் சதன் (அரசியலமைப்பு இல்லம்) மத்திய மண்டபத்திற்குள் நுழைந்தபோது, மரியாதையின் அடையாளமாக அரசியலமைப்பை வணங்கி எனது நெற்றியில் வைத்துக்கொண்டேன்… அரசியலமைப்பு 75 ஆண்டுகளை நிறைவு செய்தபோது… நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக நாடு தழுவிய நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கும் எங்களுக்கு பாக்கியம் கிடைத்தது.” குடிமக்கள் தங்களது “கடமைகளை நிறைவேற்றுவதை” தங்களது இயல்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார், மேலும் “நமது ஒவ்வொரு செயலும் அரசியலமைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

யானைகளை உள்ளடக்கிய சடங்குகளும், அரசியலமைப்பை வணங்குவதும் தொடுவதும் மட்டுமே போதுமானதாக இருந்தால், பாசிஸ்டுகளும் சர்வாதிகாரிகளும்கூட அதை மகிழ்ச்சியோடு செய்வார்கள். அரசியலமைப்புவாதம் என்பது சமத்துவம், நீதி ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்துவதையும், பன்முகத்தன்மையையும் தனிமனித சுதந்திரங்களையும் மதிக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் வழிநடத்துவதையும் கோருகிறது. மோடியும் அவரது முதல்வர்களும், அமைச்சர்களும் அவரது ஆதரவு அமைப்பும் தங்களது “ஒவ்வொரு செயலும்” அரசியலமைப்புக் கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறதா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும். அந்த சுயபரிசோதனை நடக்கும்வரை, குடிமக்கள் யானை சவாரி செய்யும்போது இந்தப் பாடலை முணுமுணுக்கலாம்: “தூ பி சாதா ஹை, கபி சால் பதல்டா ஹி நஹின் / ஹம் பி சாதா ஹைன் தெரி சால் மே ஆ ஜாதே ஹைன்.” (நீயும் அப்பாவி, ஒருபோதும் உன் போக்கை மாற்றிக்கொள்வதில்லை / நாங்களும் அப்பாவிகள், உன் தந்திரத்தில் சிக்கிக்கொள்கிறோம்).
உலக அளவில் இந்தியாவின் இடம் என்ன?
ஒரு நாளைக்குப் 12 மணிநேரம் வேலை செய்யும் ஒரு பாதுகாப்பு ஊழியருடன் (செக்யூரிட்டி கார்டு) நடத்திய வேதனையான உரையாடலின் போது அவர், பண்டிகை நாட்களில் மட்டுமே ஒரு முழுமையான உணவை உண்பதையும், மற்றபடி காய்கறிகள்கூட இல்லாமல் ரொட்டி சாப்பிடுவதையும் கூறினார். உதய்பூரில் நடந்த ஒரு பிரம்மாண்ட திருமணத்தைப் பற்றிய வலி அவருடைய பேச்சில் எரிமலையாக வெடித்தது.
ஒரு இந்தியத் தொழிலதிபரின் மகளின் திருமணத்திற்கு ரூ. 90 கோடி செலவாகியிருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அமெரிக்க பாப் பாடகி ஜெனிபர் லோபஸ் மட்டுமே தனது நிகழ்ச்சிக்காக ரூ. 17 கோடியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மாதுரி தீட்சித் முதல் ஜான்வி கபூர் வரையிலான இந்தியப் பிரபலங்களும் விருந்தினர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஒரு திருமணத்திற்கு ரூ. 90 கோடியா? முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்திற்காகச் செலவழித்த தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் சொற்பமானதே.

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பசியால் ஏற்படும் மரணத்தைத் தற்காத்துக்கொள்ளப் போராடும் கொடிய வறுமையில் வாழ்கிறார்கள் என்பதை நினைவுகூரும்போது, இந்த ஆடம்பரம் ஆன்மாவைத் துளைக்கிறது. ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்களை உலக வங்கி மிகவும் ஏழ்மையானவர்களாகக் கருதினாலும், இந்தியாவில் ஒரு நாளைக்கு ரூ. 35க்கும் குறைவான (அரை டாலருக்கும் குறைவாக) தொகையில் வாழும் ஏழைகளுக்கு அது கனவுத் தொகையாகும். ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் அடிமட்டத்தில் உள்ள 10% மக்கள் 2023-24இல் மாதத்திற்கு ரூ. 1,059 சம்பாதித்துள்ளனர். உலகப் பசி குறியீட்டில் (World Hunger Index) 123 நாடுகளில் இந்தியா 102வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு இரவும் சுமார் 20 கோடி மக்கள் பசியோடு உறங்குகிறார்கள். இந்தச் சூழல் கடும் வறுமையின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அச்சமூட்டுவதாக உள்ளது. கடந்த நிதியாண்டில் 2.81 கோடி தனிநபர்கள் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர்.

இருப்பினும், செல்வந்தர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் மேற்கொள்ளும் சுரண்டல்களையும் கொள்ளை லாபமடிக்கும் கேவலமான கலாச்சாரத்தையும் ஆய்வு செய்வதற்குப் பதிலாக, மக்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று நம் தலைவர்கள் உபதேசம் செய்வார்கள். பெரிய நகரங்களில் 10 முதல் 12 மணிநேரம் வேலை செய்யும் எத்தனை பேர் மாதத்திற்கு ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரை அல்லது அதற்கும் குறைவாகப் பெறுகிறார்கள் என்பது பற்றி எத்தனை முறை அவர்கள் பகிரங்கமாக விவாதித்தார்கள்? அதுவும் வாராந்தர விடுமுறை, மருத்துவ வசதிகள் அல்லது ஓய்வூதியப் பலன்கள் இல்லாமல். கார்ப்பரேட் லாபங்கள் அதிகரித்த போதிலும், பணமதிப்பிழப்புக்கும் கோவிடுக்கும் பிறகு வேலையிழந்த லட்சக்கணக்கானவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்களா?
ஆனால் பணக்காரர்களின் மகிழ்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதீர்கள்; இத்தகைய பிரம்மாண்ட திருமணங்களின் விவரங்களை ரசியுங்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். விருந்தினர்கள் எப்படி உபசரிக்கப்பட்டார்கள், 4 மீட்டர் உயரமுள்ள கேக் ஒரு பிரெஞ்சு சமையல் கலைஞரால் எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதைப் பாருங்கள்! உங்களுக்குத் திருப்தி இல்லையென்றால், சமூக ஊடகங்களில் கிடைக்கும் திருமணக் கொண்டாட்டங்களின் வீடியோ கிளிப்புகளைத் தேடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் கொடை அதுதானே.
இதுதான் இந்தியாவின் யதார்த்தம். இந்தப் பின்னணியில் மோடியின் பகட்டை வைத்துப் பார்த்தால்தான் மோடி என்னும் நிகழ்வின் உண்மையான பிரச்சினை என்னவென்று புரியும்.
சஞ்சய் கே. ஜா, அரசியல் விமர்சகர்.
நன்றி: தி வயர்
