தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருதில் போலி திருக்குறள் இடம் பெற்ற சர்ச்சை குறித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவை டாக்டர் மோகன் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். Thirukkural RN Ravi
இது தொடர்பாக டாக்டர் மோகன் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், மூத்த மருத்துவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு பிழை ஏற்பட்டது. இந்த பிழைக்கு நாங்களே பொறுப்பு. ஆளுநருக்கோ ராஜ்பவனுக்கோ இந்த பிழை குறித்து எதுவும் தெரியாது.

நினைவு பரிசுகளில் சரியான திருக்குறள் பொறிக்கப்பட்டு தனித்தனியாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பிழைக்கு முழுப் பொறுப்பேற்று ஆளுநருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கிறோம். இந்த எதிர்பாராத பிழைக்காக வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்குறள் பொறிக்கப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் திருக்குறளில் இடம் பெறாத ஒன்று, திருக்குறள் என பொறிக்கப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.