ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய் : திமுக அரசு மீது அமித்ஷா அட்டாக்!

Published On:

| By Selvam

amithsha attack mk stalin

வேங்கைவயல் விவகாரம் முதல் அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கு வரை, செந்தில் பாலாஜி முதல் பொன்முடி மீதான வழக்கு வரை பலவற்றை குறிப்பிட்டு திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. amithsha attack mk stalin

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (பிப்ரவரி 25) இரவு விமானம் மூலம் கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று இரவு கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய அமித்ஷா இன்று (பிப்ரவரி 26) பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்தவாறு ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உலகின் மிக தொன்மையான மொழியான தமிழில் என்னால் பேச முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மத்திய பட்ஜெட்டை பாராட்டி பேசிய அமித்ஷா, “2024ஆம் ஆண்டில்தான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரிசாவில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம். பெரும் இடைவெளிக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்றோம். இது எல்லாம் மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

2026ன் தொடக்கம் தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சியுடன் தான் தொடங்கும். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு என்.டி.ஏ. ஆட்சி அமையும்.

தமிழகத்தில் உள்ள அத்தனை பாஜக தொண்டர்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தேசவிரோத திமுகவை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஆற்றி வரும் பணிகளைத் தமிழக மக்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும்.

குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் முடிவு கட்டி, மாநிலத்தில் இருந்து தேச விரோத செயல்களை வேரறுப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பல்கலைக் கழகங்கள் போன்ற முக்கியமான இடங்களுக்கு கூட நம்முடைய சகோதரிகள் பாதுகாப்பாக சென்று வர முடியாத நிலை உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் 700 நாள் கடந்தும் கூட இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் அந்த வழக்கு ‌அப்படியே இருக்கிறது.

கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் புரையோடிக் கிடக்கிறது. கள்ளச்சாராயத்தை காய்ச்சுபவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மாறாக அதுகுறித்து புகார் செய்யும் கல்லூரி மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

போதைப்பொருள் மாஃபியா கும்பல் ஆட்சியாளர்களின் ஆசியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை ஆட்சியாளர்களின் ஆதரவோடு நடக்கிறது. ஊழல் செய்வதில் திமுக தலைவர்கள் எல்லாம் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கியதில் மிகப்பெரிய சாதனைப்படுத்திருக்கிறார். இன்னொருவர் பண மோசடி, செம்மண் கடத்தல் வழக்கிலும் மாட்டிகொண்டிருக்கிறார்.

மற்றொருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வைத்திருக்கிறார். இன்னொருவர் நிலக்கரியில் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறார். 6000 கோடி ரூபாய் சிஆர்ஐடிபி ஊழலில் சிக்கியிருக்கிறார்.

2ஜி ஊழலை நம்மால் மறக்கவே முடியாது. இன்னும் அது முடியவில்லை. யார் யாரெல்லாம் ஊழல் செய்வார்களோ, அவர்களை தேடி தேடிதான் திமுக உறுப்பினராக சேர்க்கும் போல் உள்ளது. ஆட்சியில் இருக்கும் அவலங்கள் வெளிவந்துவிடக்கூடாது என்று முதல்வரும் அவருடைய புதல்வரும் புதிது புதிதாக பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பை புதிய பிரச்சினையாக ஸ்டாலின் உருவாக்குகிறார். இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவிருக்கிறார். பிரதமர் மோடி, எந்த தென்னியந்திய மாநிலத்திலும் தொகுதிகள் எதுவும் குறையாது, கூடுதலாகத்தான் சேரும் என்று நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையில் வழங்கப்படும் புதிய சீட்டுகளில் எந்த குறைபாடும் இல்லாமல், விகிதாச்சாரம் அடிப்படையில் ஒதுக்கப்படும்.

தமிழக மக்களுக்கு ஸ்டாலின் பொய்யை சொல்லி துரோகம் செய்கிறார். நான் இங்கு புள்ளி விவரத்தோடு வந்திருக்கிறேன்.

2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலத்தில் யுபிஏ அரசு 1,52,901 கோடி ரூபாய் வழங்கியது. அதுவே மோடி அரசு 2014 முதல் 2024 வரை, கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 5,08,337 கோடியை வழங்கியுள்ளது. ரூ. 1,43,000 கோடியை தமிழ்நாடு உள்கட்டமைப்புக்காக மட்டும் வழங்கியுள்ளது” என்று பேசினார்.

முன்னதாக இன்னொரு மொழிப்போருக்கு தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். அதுபோன்று செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்டோர் மீதான வழக்குகளையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். amithsha attack mk stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share