சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு ஒரு நாள் கழித்து ஜூன் 1 ஆம் தேதி பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு உள்ளது. இதனால் சுமார் 20000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 16 ஆண்டுகளாக, சம சேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 26ஆம் தேதி சென்னை வந்த ஆயிரத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், பிராட்வேயில் உள்ள ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை எழிலகம், மெரினா காமராஜர் சாலை என பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இன்று (டிசம்பர் 30) எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு போராடுவதற்கான இடம் மற்றும் அனுமதி கொடுக்காததன் காரணமாக பல்வேறு பொது இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்,போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
எனினும் அவர்கள் செல்லாததால் 5 ஆவது நாளாக ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
