மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று (அக்டோபர் 6) நேரில் சென்று நலம் விசாரித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸும் உடல்நலக் குறைவு காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையறிந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் ராமதாஸையும், திமுக கூட்டணியில் உள்ள வைகோவையும் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள்.கே.என். நேரு, எ.வ. வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இருகதலைவர்களையும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
எந்தக் கூட்டணியிலும் அங்கம் வகிக்காத ராமதாஸையும், திமுக கூட்டணியில் உள்ள வைகோவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது அரசியல் ரீதியாகவும் இந்த சமயத்தில் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சி சீமானும் இன்று அப்போலோ சென்று ராமதாஸ் மற்றும் வைகோவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.