”கரூர் சம்பவத்திற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். யார் யாரோ மீது பழிசுமத்தி திமுக அரசு தப்பிக்க முடியாது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் அவர் இன்று (அக்டோபர் 2) மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “கரூரில் கடந்த 27ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியும். இன்றைய ஆட்சியாளர்கள் உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் கரூரில் 41 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்கட்சிகளுக்கு ஒரு நீதி அதுதான் இன்றைய அரசியல்.
நாட்டு மக்களை காக்கக் கூடிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கட்சியின் பொதுக்கூட்டம், பேரணி, போராட்டம் இதற்கெல்லாம் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. இன்றைக்கு முதல்வர் கையில் தான் காவல்துறை உள்ளது. அவர் சரியாக உத்தரவிட்டு, பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரை நாம் இழந்திருக்க மாட்டோம். இன்றைக்கு ஒரு நபர் ஆணையம் விசாரணை நடைபெற்று வருவதால், இதை பற்றி ஆழமாக பேச முடியாத சூழ்நிலை.
கரூர் சம்பவத்தால் தமிழ்நாடே இன்று தலைகுனிந்து விட்டது. இந்தியாவில் அரசியல் பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றது இல்லை. இந்த சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். யார் யாரோ மீது பழிசுமத்தி திமுக அரசு தப்பிக்க முடியாது.
இனியாவது எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்புத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதுவரை 163 சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தேன். ஆனால் 5,6 மாவட்டங்களில் தான் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்தது. இதற்கெல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு தகுந்த பதிலடியை மக்கள் வழங்குவார்கள்.
கடந்த சில நாட்களாக அரசின் திட்டங்களை சொல்ல வேண்டும் என அரசின் துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். அதனை சொல்லலாம். ஆனால் கரூர் சம்பவத்தில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடைபெற்று வரும்போது, எப்படி ஒரு அரசு செயலாளர் இதை நியாயப்படுத்தி விளக்கம் அளிக்க முடியும்? இது அவமதிப்பு. அதிகாரிகள் அரசியல் செய்யக்கூடாது. இந்த நியாயத்தை திமுக அரசிடம் நாம் எதிர்பார்க்க முடியாது” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.