தேனி மாவட்டம் போடியில் எடப்பாடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களச் சந்தித்து பேசும்போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்துள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்தசூழலில் நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்கள் தேவர் பேரவை சார்பில் ஒட்டப்பட்டன. அதில் முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று மாலை எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்துக்காக தேனி கம்பத்துக்கு சென்ற போது அவரது வாகனம் முற்றுகையிடப்பட்டது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தி சிலர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது வாகனத்தில் இருந்து இறங்கி வந்த பாதுகாவலர்கள், அவர்களை அங்கிருந்து கலையச் செய்தனர்.
இந்நிலையில் இரவு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொகுதியான போடிநாயக்கனூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சார வாகனத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மக்களும் அதிமுக ஆதரவாளர்களும் குவிந்துள்ளனர்.

அப்போது போடிநாயக்கனூர் நகராட்சி குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சியளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூற அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ‘எங்களுக்கு நீங்கள் மட்டும் போதும்’ என்று ஆதரவாக போஸ்டர்கள் ஏந்தியிருந்தனர்.
ஓபிஎஸின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடிக்கு எதிர்ப்பு, ஆதரவு என அதிமுகவினர் இரு பிரிவாக செயல்பட்டுள்ளதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.