அதிமுக- பாஜக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். eps openly call tvk vijay and seeman for alliance
‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
கேள்வி : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக நடத்துகிறதா?
பதில் : இதுவரை அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
கேள்வி : உங்கள் கூட்டணியில் இணைய தவெகவுக்கு அழைப்பு விடுப்பீர்களா?
பதில் : மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துகளை கொண்ட அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் இணைய வேண்டும்.
கேள்வி : இது தவெகவுக்கும் பொருந்துமா?
பதில் : திமுகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் விஜய்யும் விரும்புகிறார். இந்த அழைப்பு அவரது கட்சிக்கும் பொருந்தும்.
கேள்வி : சீமானின் நாம் தமிழர் கட்சி?
பதில் : திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்த விஷயத்துக்கு அதற்குள் ஒரு தெளிவு பிறக்கும்.
கேள்வி : பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் உங்கள் கூட்டணியில் எப்படி இணையும்?
பதில் : 1999 நாடாளுமன்ற தேர்தலிலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும் இதுபோல் நடக்கவில்லையா?
கேள்வி : அதிமுக – பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிடையே ஒத்துழைப்பு உள்ளதா?
பதில் : என் எழுச்சிப் பயணத்தில் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்று வருகிறார்கள். கூட்டணி கட்சியின் தொண்டர்களிடையே நல்ல எழுச்சி உள்ளது.
கேள்வி : பாமகவில் ராமதாஸுக்கும், அவரது மகனுக்கும் இடையே நடக்கும் மோதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : அவர்கள் கட்சி விவகாரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன்.
கேள்வி : சட்டம் ஒழுங்கை திமுக அரசு கையாள்வது, ஊழலை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதி, ஆளும் அரசியல்வாதிகள் மீதான அமலாக்கத்துறை சோதனைகள் ஆகியவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில் : திமுக எப்படி ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்? அது ஊழலின் ஊற்றுக்கண். அமலாக்கத்துறை வழக்குகளில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நம்புகிறேன். ஊழலில் ஈடுபட்ட எந்த திமுக அமைச்சரும் தப்பிக்க முடியாது.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலும் இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. குற்ற விகிதம் அதிகரித்து வருகிறது. திமுகவினர் குற்றங்களில் ஈடுபடும்போது, ஆட்சியாளர்கள் எப்போதும் அவர்களைப் பாதுகாக்கிறார்கள். சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படும் காலம் விரைவில் வரும். நீட் தேர்வை ஒழிப்பதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, 25 மருத்துவ மாணவர்களின் மரணத்திற்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
கேள்வி : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் திமுக பெண்களின் வாக்காளர்களை கவரவில்லையா?
பதில் : ‘தாலிக்கு தங்கம்’ திட்டத்தில் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 நிதி வழங்கும் திருமண உதவித்திட்டத்தையும் ரத்து செய்த திமுக அரசை மக்கள் மறக்கவில்லை. பெண்கள் திமுகவுக்கு உரிய பாடத்தை கற்பிக்கப் போகிறார்கள்.
கேள்வி : அதிமுகவின் எதிர்காலத்திற்கான உங்கள் விருப்பம் என்ன?
பதில் : அதிமுக மேலும் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதிமுக மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதைக் காண விரும்புகிறேன். நான் எப்போதும் அடிமட்ட தொண்டர்களுடன் ஒரு தலைவராக அல்ல, அவர்களில் ஒருவராக இருக்கிறேன். இதன் காரணமாக, அவர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் நான் புரிந்துகொள்கிறேன். அவர்களின் விருப்பப்படி, நான் செயல்படுகிறேன். 2026-ல் அரசியல் எதிரிகளை தோற்கடிக்க நாங்கள் வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம்.
கேள்வி : பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் அரியலூருக்கு வருகை தர உள்ளார். நீங்கள் அவரை சந்திப்பீர்களா?
பதில்: விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.