கூட்டணி குழப்பம்… ஈபிஎஸ் பொதுச் செயலாளர் பதவியை இழப்பார் : கே.என்.நேரு

Published On:

| By Kavi

எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு பொதுச் செயலாளர் பதவியை இழப்பார் என்று கே.என்.நேரு கூறியுள்ளார். EPS lose his General Secretary post

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். 

 “திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!”,  “போலி விவசாயி ஸ்டாலின்” என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டார். 

இந்நிலையில் இன்று (ஜூன் 16) தஞ்சையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.  “செய்திகளை படிக்காமல்  பார்க்காமல்  அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கடுமையாக சாடியிருந்தார். 

யார் அரைவேக்காடு? ஈபிஎஸ் EPS lose his General Secretary post

இதற்கு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,  “திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.

“அரைவேக்காட்டுத் தனமாக” இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!

தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே- இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே?

மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப் படுத்தவில்லை!

நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத முதலமைச்சர்!

“நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்” என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை!

நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்?

எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் “பெட்டி” மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா?

ஆக, “ஒன்றும் தெரியாத முதல்வர்” என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் ஸ்டாலின்” என்று குறிப்பிட்டிருந்தார். 

நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம் EPS lose his General Secretary post

இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு,  ’’எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியின் நினைப்பு பெட்டியில்தான் உள்ளது. செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார் பழனிசாமி. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார்” என்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங் கூட்டை கிழித்துவிட்டது போல!

‘நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்’ என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார். எங்கள் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது போல பழனிசாமியின் பதிவும் அதே அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்கிறது.

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையாம். யார் சொல்லுவது பழனிசாமி? 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா?

பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச ‘வை-பை’ இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்களே… ஐந்தாண்டு ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை?

அதற்கு முந்தைய தேர்தலான 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் வழங்கப்படும் என்று சொன்னார்களே… நிறைவேற்றினார்களா? அம்மா பேங்கிங் கார்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டர் என்று கலர் கலராக எத்தனை மத்தாப்புகளைக் கொளுத்தினார்கள்? இதையெல்லாம் நிறைவேற்றாத பழனிசாமி திமுகவின் வாக்குறுதியைப் பற்றி வக்கணையாகப் பேசுவது வெட்கக்கேடு.

கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது கமலாலயம். இன்னொரு பக்கம்  ’பழனிசாமிதான் அடுத்த முதல்வர்’ என மும்மாரி துதி பொழிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான மாய உலகில் வாழும் பழனிசாமியை மீட்க வழியே இல்லை!

வாக்குச்சாவடியில்தான் முதல்வரை மக்கள் தேர்வு செய்வார்கள். அது நடக்காது என்பதால்தானோ, பழனிசாமியை முதல்வர் ஆக்கத் தியானம் செய்து சிறப்புப் பூஜையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகி இருந்திருந்தால்தான் பழனிசாமிக்கு மக்கள் நலன் மீது கவனம் இருந்திருக்கும். கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம் முழுக்க முழுக்க ‘பெட்டி’ மீதேதான் இருந்து வருகிறது.

பத்திரிகைகளைப் படிக்காமல், தொலைக்காட்சி செய்திகளை பார்க்காமல் வாட்ஸ்அப் தகவலை நம்பி அறிக்கை விடும் பழனிசாமிக்கு கோவம் மட்டும் டன் கணக்கில் வருகிறது. உங்கள் பொய்யை முதலமைச்சர் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதை எண்ணி பழனிசாமி அவமானப்பட வேண்டும்.

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று கூறி ஆட்சி நடத்தியவர்தானே பழனிசாமி! உங்களைப் போல அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று ஆட்சி நடத்தாமல், மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டுச் சரிசெய்யும் முதலமைச்சராக முதலமைச்சர் இருக்கிறார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அதிமுக ஆட்சி போல் இல்லாமல் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர்.

உட்கட்சி பிரச்னை, கூட்டணிப்பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாதவர்தான் பழனிசாமி” என்று ஈபிஎஸ் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். EPS lose his General Secretary post

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share