உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

eps

தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி. (LPG) சிலிண்டர்களின் விநியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு தொழில்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

ADVERTISEMENT

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share