டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதிலடி!

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

புதிய தமிழகம் கட்சியினர் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். அவர்களுக்கு எத்தனை சீட் கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொள்ள அதிமுக ஆர்வம் காட்டவில்லை.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர்களை அதிமுக அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் “புதிய தமிழகம் கட்சி எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. பிற கட்சிகள் கூட்டணியில் சேரும்போது, அந்தக் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில்தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் கூட்டணியில் இல்லை. 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

அதிக சீட்கள் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் முடியாது என்று தெரிவித்தோம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share