ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கேட்டையன் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த ஒருவருக்கு பதவி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கொங்கு மண்டலத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிபிரசார தொடக்க விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
தொடர்ச்சியாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர் சந்தித்த போது அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசினார். அதற்கு 10 நாட்கள் கெடுவிதித்தார். செங்கோட்டையன் பேசிய அடுத்த நாளே அவரது கட்சிப்பதவிகளை பறித்து கடும் நடவடிக்கையில் இறங்கினார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையனின் 10 நாள் கெடு முடிவடைந்த நிலையிலும் எந்த வித மாற்றமும் இல்லை. இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளும் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பதவி பறிப்பால் காலியாகும் இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக பொருளாளராக செல்வராஜ் என்பவரை (அக்டோபர் 3) நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார். ஆனால் செல்வராஜ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டார்.
ஆனால் தனது கட்சி தொண்டர் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருக்கு பதவி வழங்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடியின் இந்த நடவடிக்கையால் கட்சி தொண்டர்கள் பலரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.