தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

Published On:

| By Pandeeswari Gurusamy

Who is in the NDA alliance

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

ADVERTISEMENT

இந்த இனிய பொங்கல் திருநாளில், மக்கள் தங்களது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டினுள்ளும், வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, அது பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளை அலங்கரித்து, பொங்கல் மற்றும் வாழைப் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கி, தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

உழவர் பெருமக்கள், தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத் திட்டங்கள் தீட்டப்பட்டு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ADVERTISEMENT

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share