செங்கோட்டையன் விதித்த கெடுவைத் தொடர்ந்து நேற்று தேனியில் பிரச்சாரத்திற்கு சென்ற இடமெல்லாம் அதிமுக ஒன்றிணையக் கோரி பலர் கோஷமிட்டனர். இதனையடுத்து இன்று (செப்டம்பர் 6) காலை கட்சி மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ”தமிழகத்தைக் காப்போம்.. மக்களை மீட்போம்” என்ற பெயரில் மாநில முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
இதற்கிடையே கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், நேற்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார்.
அவருக்கு ஆதரவாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும், அதிமுக தொண்டர்களும், குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தேனி மாவட்டத்தில் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தி வழிநெடுக சிலர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, வாகன விளக்குகளை அணைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் பயணித்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
தேனியைத் தொடர்ந்து நான்காவது கட்ட சுற்றுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இன்று வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் செங்கோட்டையின் விதித்த கெடு தொடர்பாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி வேலுமணி, முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருடன் எடப்பாடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.