டெல்லியில் இன்று இரவு நடைபெறும் அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம் பெறக் கூடிய கட்சிகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் அமித்ஷா, கடந்த 4-ந் தேதி தமிழகம் வருகை தந்தார். திருச்சியில் தங்கியிருந்த அமித்ஷாவை அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுகவில் இடம் பெறக் கூடிய கட்சிகள், கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இதனையடுத்து டெல்லி சென்ற எஸ்.பி.வேலுமணி, பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இதனடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றார்.
டெல்லியில் இன்று இரவு அமித்ஷாவை எடப்பாடி சந்தித்து பேசுகிறார். அப்போது, அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பெறக் கூடிய கட்சிகள் குறித்தும் கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
இச்சந்திப்பு குறித்து டெல்லியில் நாம் விசாரித்த போது, “தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறக் கூடிய கட்சிகள் பற்றி அமித்ஷாவிடம் பிரதமர் மோடி ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லி இருக்கிறார். 2021-ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் இம்முறையும் கூட்டணியில் இடம் பெற வேண்டும். அதேபோல ராமதாஸ் பாமக, தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும்; அப்போதுதான் தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதுதான் மோடி பிறப்பித்திருக்கும் கட்டளை.
அத்துடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவருமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்க வேண்டும்; அவர்களுக்கான தொகுதிகளை பாஜக ஒதுக்கீடு செய்யும் என்பதும் மோடியின் நிலைப்பாடு.
இச்சூழலில் இன்று இரவு டெல்லியில் தம்மை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் ’மோடியின் கட்டளை’ குறித்து தெரிவிக்க இருக்கிறார் அமித்ஷா” என்கின்றனர்.
அதிமுகவின் பொதுக்குழுவில், “கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; கூட்டணியில் கட்சிகளை சேர்க்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், ”ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துதான் ஆக வேண்டும்; அவர்களுக்கான தொகுதிகளை பாஜக தமது கோட்டாவில் இருந்து ஒதுக்கீடு செய்து தரும்” என அமித்ஷா தெரிவிக்க இருப்பதை எடப்பாடி பழனிசாமி அப்படியே ஏற்றுக் கொள்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க கூடாது என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி மறுத்தால், மோடியின் முடிவை ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ‘ஒத்துக் கொள்ள வைக்கப்படுவாரா’? என்ற சூழ்நிலையும் நிலவுகிறது.
அதிமுக- பாஜக கூட்டணி தற்போதைய நிலவரம்:
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக, தமாகா உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. தற்போது பாமகவில் அன்புமணி இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார். தமாகா ஏற்கனவே கூட்டணியில் நீடிக்கிறது.
