ADVERTISEMENT

நாமக்கல்: 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

குமாரபாளையம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். பதற்றமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிய நிலையில், நள்ளிரவில் சிறுமி உடலில் காயங்களுடன் அழுதுகொண்டே வீடு திரும்பினார்.

ADVERTISEMENT

உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், குற்றவாளியைப் பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கிடையில், குமாரபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் கட்டி வைத்தனர். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்மாபேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. அவரே சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, உலக மகளிர் தினமான இன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது.

ADVERTISEMENT

ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே?”என தெரிவித்துள்ளார்.

ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா? குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் , அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் , ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share