கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு ஏற்பட்டாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க. ஸ்டாலின் ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரையாண்டு விடுமுறையையொட்டி தொடங்கிய போராட்டத்தை, பள்ளிகள் திறந்த பிறகும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 17-ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில்,இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து வீட்டுச் சிறையில் (House Arrest) வைத்துள்ள ஸ்டாலின் அரசு, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு சுவிட்ச் ஆஃப் செய்து, தற்போது வரை விடுவிக்கவில்லை என செய்திகள் வருகின்றன.

சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க. ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக ஆசிரியர்களைக் கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share