அதிமுக ஆட்சிக்கு வந்தால் நீலகிரியில் இ பாஸ் முறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
54வது நாளான இன்று (செப்டம்பர் 23) நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. அரிசி முதல் எண்ணெய் வரை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சுற்றுலா தலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் இங்கு குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் தான் வந்து செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு சரியான வழக்கறிஞரை வைத்து வாதங்களை எடுத்து வைக்காததால் இந்த உத்தரவு வந்துள்ளது.
சீசன் காலத்தில் குறிப்பிட்ட வாகனங்கள் தான் வரவேண்டும் என்று இ பாஸ் நடைமுறையை அமல்படுத்தியதால் வியாபாரிகள் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் நீதிமன்றத்தை நாடி இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும்.
எல்லா நாடுகளிலும் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் திமுக அரசு அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை ‘ என்று குற்றம்சாட்டினர்.
கடந்த 2024 ஏப்ரல் முதல் ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வால்பாறைக்கு செல்லவும் இபாஸ் முறையை அனைத்து சோதனை சாவடிகளிலும் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
குன்னூரில் நடந்த இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.