செங்கோட்டையனிடம் இருந்து பறித்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு ஏ.கே.செல்வராஜை தற்காலிகமாக நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பிரிந்து கிடக்கும் அதிமுக தலைவர்கள் அனைவரும் மீண்டும் ஒண்றிணைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தனக்கு 10 நாள் கெடு விதித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை இன்று பறித்து உத்தரவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கோட்டையனிடமிருந்து பறித்த பதவிக்கு அடுத்த சில மணி நேரங்களில் புதிய பொறுப்பாளரை நியமித்து உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான A.K. செல்வராஜ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.