சென்னையில் நடைபெற்ற ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஒரே மேடையில் ஒன்றாக அருகருகே அமர்ந்து சிரித்து பேசியது கட்சியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 30) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

அப்போது அங்கு போடப்பட்டிருந்த மேடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இருவரும் அருகருகே அமர்ந்தனர்.

முன்னதாக தன் அருகில் வந்த அண்ணாமலையை கைக்கொடுத்து சிரித்தபடி வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின்னர் இருவரும் சகஜமாக பேசி நலம் விசாரித்துக்கொண்டனர்.
தொடர்ந்து மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் அண்ணாமலையை ’சகோதரர்’ என குறிப்பிட்டு பேசினார்.
அதன்பின்னர் பேசிய அண்ணாமலை, எடப்பாடியை ’அண்ணன்’ என்று குறிப்பிட்டார். அதோடு, ”இங்கு வந்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறார் என்று குறிப்பிட்டீர்கள். அந்த மாற்றம் வரட்டும்” என பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக ‘கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு’ என பேசி வந்தார் அண்ணாமலை. அதற்கு அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பதில் கொடுத்தார் எடப்பாடி.
இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் மோதல் போக்கு காணப்பட்டது. எனினும் நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில், எடப்பாடியை முதல்வாராக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என அண்ணாமலை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இருவரும் இன்று ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து சிரித்து பேசி கொண்டது இரு கட்சியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.