ரூ17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில்
ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் (Enforcement Directorate Anil Ambani) அம்பானி ஆகஸ்ட் 5-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
வங்கிகளில் கடன் பெற்று அதனை திரும்பச் செலுத்தாததால் ரிலையன்ஸ் குழும அதிபர் அனில் அம்பானியை திவாலானவர் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்தது. இதனையடுத்து அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை 24-ந் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வங்கிகளில் ரூ17,000 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 5-ந் தேதி அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத்தில் ஜூலை 22-ந் தேதி சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர் காம்) ஸ்டேட் வங்கியிடம் வாங்கிய கடன் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளிக்கையில், “ரிசர்வ் வங்கியின் “மோசடி இடர் மேலாண்மை” வழிகாட்டல்கள் மற்றும் வங்கியின் இயக்குநரவை வகைப்படுத்தல் கொள்கையின் அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் அதன் பிரதான பங்குதாரர் அனில் அம்பானி ஆகியோரை “மோசடி” என ஸ்டேட் வங்கி 13.06.2025 அன்று வகைப்படுத்தி இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் தகவல் வெளியீட்டு விதிகளின்படி ஸ்டேட் வங்கியின் மோசடி வகைப்படுத்தலுக்கு தான் ஆளாகி இருப்பதை 01.07.2025 அன்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடமிருந்து ஸ்டேட் வங்கிக்கு வர வேண்டிய கடன் தொகை மட்டுமே 2227.64 கோடிகள் (வட்டி இதர செலவுகள் 26.08.2016 லிருந்து சேரும்) மற்றும் நிதி அல்லாத வங்கி உத்தரவாதம் 786.52 கோடிகள்.
இப்போது திவால் சட்டம் 2016 நடைமுறையின் கீழான நடவடிக்கைக்கு ஆர்.காம் நிறுவனம் ஆளாகி உள்ளது. கடன் அளித்தோர் குழு அளித்த தீர்வு தீர்மானம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் 06.03.2020 அன்று சமர்ப்பிக்கப்பட்டு அதன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இது தவிர அனில் அம்பானி மீது தனிப்பட்ட முறையிலும் திவால் சட்டத்தின் அடிப்படையில் ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.