திருவண்ணாமலை ஆக்கிரமிப்பு இடங்கள் தொடர்பான பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாமரை கேணி உள்ளிட்ட நீர் நிலைகளையும் மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வில் இன்று (அக்டோபர் 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் திருவண்ணாமலை மலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் மலை சரிவில் ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மலைப்பகுதிகளிலும் நீர் நிலைகளிலும் ஆக்கிரமித்து உள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
