கோவை ஆலந்துறை பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஆலந்துறை அருகே வடிவேலம்பாளையம் அடுத்த மூலப்பாளையம் பகுதியில் நேற்று (அக்டோபர் 6) யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மதுக்கரை வனத்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியை விட்டு ஒற்றைக் காட்டு யானை ஒன்று வெளியேறியது. இதையடுத்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். அதனால் ஆக்ரோஷமான ஒற்றை காட்டு யானை வனத்துறையினரின் வாகனத்தை நோக்கி வேகமாக ஓடி வந்து தாக்க முயற்சி செய்தது. இதைத்தொடர்ந்து ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தை இயக்கியதால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது.
இதேபோல் கோவை ஆலந்துறை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தானிகண்டி மலைவாழ் மக்கள் கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அருகே இருந்த கோவிலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர்.
கடந்த வாரம் இந்த காட்டு யானை வெள்ளியங்கிரி கோவில் வளாகத்திற்குள் புகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த பரபரப்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.