பாஸ்கர் செல்வராஜ்
முதலில் ஒன்றியம் கொண்டுவரப் போகும் மின்சார சீர்திருத்தச் சட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் சீரான இடைவெளிகளில் வந்த வண்ணம் இருந்தது. அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அதனை அறிமுகப்படுத்தப் போவதாக செய்திகள் வந்தது. இதற்கு அடுத்து வந்த தொழிலாளர் திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக வினையாற்றும் நிலையில் இந்த மின்சார சீர்திருத்தச் சட்டம் குறித்து யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
இது தொழிலாளர்களை விட அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று விட்டுவிட்டார்களா? என்று தெரியவில்லை. தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல இது ஒட்டுமொத்த மக்களுக்கும் கொண்டுவரும் ஆபத்தையும் விளைவுகளின் வீரியத்தையும் பத்திரிக்கைச் செய்திகள் ஓரளவு ஒளிவுமறைவின்றி தெளிவாகவே பேசியிருக்கின்றன. ஆனால் தனித்தனியாகப் பிரித்துப்பேசி தொகுப்பாக முழுமையாகப் புரிந்துகொள்ள விடாமல் செய்து இருக்கின்றன.
காரணம், தீர்வு, பயனாளிகள்

இப்போது இந்தச் சீர்த்திருத்தத் சட்டம் கொண்டுவரக் காரணமாகப் பத்திரிகைகள் சொல்வது மாநிலங்களின் மின்சார உற்பத்தி, விளம்பல், விற்பனை அதில் ஈடுபடும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஏழு டிரில்லியனாக உயர்ந்து விட்டதாம். இதற்குத் தீர்வாக ஒன்றியம் தனியார்மயமாக்கத் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அது எப்படிக் கடனைத் தீர்க்கும் என்றும் பொதுவாக ஆதரித்துப் பேசி இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமா கடனில் இருக்கிறது? மற்ற தனியார் நிறுவனங்களும்தான் கடனில் இருக்கின்றன.
பொதுத்துறை நிறுவனங்களின் கடனை அடைக்க தனியார்மயம் ஆக்குவதைப்போல மக்கள் வரிப்பணத்தை முதலாகவும் கடனாகவும் பெற்று வளர்ந்து இன்றுவரை வாங்கிய கடனை அடைக்க முடியாத இந்தத் தனியார் நிறுவனங்களை அரசு கையகப்படுத்தி பொதுத்துறை நிறுவனமாக்கி சமூகமயமாக்கி விடலாமா? கடன்பட்டு வோடபோன் நிறுவனம் திவாலானதை அடுத்து ஒரு மக்கள்நல அரசாக இருந்தால் அதைப் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைத்து அப்படியான ஒரு நடவடிக்கையைத்தான் எடுத்து இருக்கும்.
மாறாக பார்ப்பனிய பெருமுதலாளிகளின் ஒன்றிய அரசு அதில் முதலிட்டு அந்த நிறுவனத்தைப் பிணையெடுத்தது. அவர்களின் ஊடகமான இவர்கள் அதை ஆதரித்து எழுதினார்கள். அதே முறையில் கடன்பட்டு இருக்கும் மின்துறை பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றியம் முதலிட்டு ஏன் பிணையெடுக்கக் கூடாது? தனியாருக்கு பிணையெடுப்பு நீதி பொதுத்துறைக்கு தனியார்மய (அ)நீதியா? போகட்டும்.. காலம் வரும்போது மக்கள் நல அரசு அமைந்து உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புவோம்.

எப்படித் தனியார் மயமாக்கி இந்தக் கடன் பிரச்சனையைத் தீர்க்கப் போகிறார்கள் என்பது இன்னும் சுவாரசியமானது.
1. பங்குச் சந்தையில் பொதுத் துறை மின்சார நிறுவன பங்குகளை விற்பது
2. தனியார் நிறுவனங்களை அரச மின்விளம்பல் கட்டமைப்புகளைப் பயன்படுத்த அனுமதித்து சில்லறை விற்பனையில் அவர்களையும் இணைத்துக் கொள்வது
3. நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மீது அதிக மின்கட்டணம் விதித்து விவசாயிகள் மற்றும் குடும்பங்களுக்கு மானிய விலையில் அளிக்கும் மின் சேவையை நிறுத்துவது
4. மாநில மின்கொள்முதலில் மரபுசாரா மின்சாரத்தின் அளவு 30-43 விழுக்காடாக இருப்பதைக் கட்டாயம் ஆக்குவது
5. மாநிலங்கள் குறைந்தபட்சம் 20 விழுக்காடு மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களிடம் கண்டிப்பாக வாங்க வைப்பது என வரிசையாக வரப்போகும் புதிய விதிகளை வாசிக்கிறார்கள்.
இதைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களைக் கடனில் இருந்து மீட்பது போல தெரியவில்லையே! என்று எண்ண வேண்டிய தேவையின்றி அந்தப் பத்திரிக்கைகளே இதனால் பயனடையப்போகும் நிறுவன அதிபர்கள் அதானி, அம்பானி, டாடா, கொனேகா, மேத்தா என தெளிவாகவே எழுதி இருக்கின்றன.
அதே பிஎஸ்என்எல் வழியில்

அதெப்படி என்றெல்லாம் நாம் மண்டையைச் சொறிய வேண்டாம். ஜியோ எப்படி பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பைச் செலவின்றி பயன்படுத்தி தின்று செரித்து இன்று முன்னணி நிறுவனமாக வந்திருக்கிறது என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதே பாதையில் இப்போது மாநில மின்சார பொதுத்துறை நிறுவனங்களைக் கைப்பற்ற இருக்கிறார்கள் என்று இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அப்படிக் கைப்பற்றுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தொலைத் தொடர்புத்துறை முழுக்க முழுக்க ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஒரே நிறுவனமாக இருந்தது. அவர்கள் விரும்பியபடி வேகமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தின்று செரித்து விட்டார்கள். மின்சாரம் ஒன்றியம், மாநிலம் ஆகிய இருவருக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு மாநில மக்களின் சொத்தாகத் தனித்தனியாக வேறு இருக்கிறது. ஆகவே விருப்பம்போல எண்ணியவுடன் செய்து முடிக்க முடியாது.
அதற்கு என்ன வழியைப் பயன்படுத்துவது என்றெல்லாம் ஒன்றிய பாஜக அரசு சிரமப்படவில்லை. பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி குறித்த புதிய கொள்கையை அறிவித்துவிட்டு “அதை ஏற்றால் நிதி இல்லையேல் நிதிக்கு எங்களிடம் கையேந்தி அழுது புலம்ப வேண்டியது மாநிலங்களின் விதி” என்ற முறையையே இதிலும் பயன்படுத்த இருக்கிறார்கள்.
எப்படியென்றால் வோடபோன் நிறுவனத்தைப் பிணையெடுத்ததைப் போலவே ஒன்றியம் ஒரு டிரில்லியன் பணத்தைக் கொண்டு பொதுத்துறை மின் நிறுவனங்களைப் பிணையெடுக்க இருக்கிறது. கூடவே குறைந்த வட்டி மற்றும் வட்டியில்லாக் கடனையும் தரவிருக்கிறது.

இந்தப் பணமும், ஐம்பது ஆண்டு வட்டியில்லாக் கடனும், ஐந்து ஆண்டு குறைந்த வட்டிக் கடனும் வேண்டுமென்றால் மாநிலங்கள் விளம்பல் கட்டமைப்பில் 51 விழுக்காட்டைத் தனியாருக்கு (டாடா, ரிலையன்ஸ், அதானி, சிஇஎஸ்சி, டோரண்ட்) விற்க வேண்டும். இதில் உடன்பாடு இல்லையென்றால் 26 விழுக்காடு தனியாருக்கு விற்று ஐந்து ஆண்டு குறைந்த வட்டிக் கடனை மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம். அடடா.. மக்கள் பணத்தைக் கொண்டு மக்களின் சொத்தைத் தனியாருக்குக் விற்கும் என்னவோரு “அற்புதத்” திட்டம்.
உண்மையான காரணம்
மாநில மின் பொதுத்துறை நிறுவனங்களின் கடனைக் காரணமாகக் கூறினாலும் இப்படியான திட்டத்துக்கான உண்மையான தேவை இந்தத் தனியார் நிறுவனங்களின் மரபுசாரா சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கான சந்தை இல்லை அல்லது குறைவாக இருக்கிறது என்பதைப் பத்திரிக்கைகள் பிறிதொரு இடத்தில் எழுதி இருக்கின்றன.
ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விண்ணை முட்டுவதாக செய்தி வாசிக்கும் இவர்கள் அந்த உற்பத்திக்கு ஏற்ப மின்சாரத் தேவை பெருகவேண்டுமே… ஆனால் பெருகிய மின் உற்பத்திக்குச் சந்தை இல்லாமல் இருப்பது விந்தையாக இருக்கிறதே என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை.

வளரும் நாடான இந்தியாவில் மின்சாரத்துக்கான தேவையும் நுகர்வும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவர்கள் சொல்லும் வேகத்தில் பெருகவில்லை என்பதையே இது கோடிட்டுக் காட்டுகிறது. கூடவே நாட்டின் எல்லா பகுதிகளிலும் உற்பத்தி பெருகி மின்சாரத் தேவை உயரவில்லை. தென் மாநிலங்களில்தான் உற்பத்தி பெருகி மின்சாரத்துக்கான தேவை கூடியிருக்கிறது என்பது ஊருக்கே தெரியும்.
இந்த முதலாளிகள் ஒன்றியத்தின் இலவச பணமும் வெப்பம் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் இலவசமாக நிலமும் கிடைக்கிறது என்று குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சூரிய மின்னாற்றல் தகடுகளை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் மின்சாரத்துக்கான தேவை இம்மாநிலங்களில் இல்லை.
தொழிற்துறை உற்பத்தி அதிகம் நடக்கும் தென் மாநிலங்கள் வெகுதொலைவில் இருக்கிறது. மேற்கில் இருந்து தேசிய மின்கடத்திக் கட்டமைப்பைக் கொண்டு தென்மாநிலங்களுக்குக் கொண்டு வரும்போது அதன் அடக்கவிலை அதிகமாகி விடுகிறது. அந்த விலை உயர்ந்த மின்சாரத்தை இம்மாநிலங்கள் வாங்க மறுக்கின்றன. உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தேக்கி வைக்கவும் முடியாது. எனவே விலை உயர்ந்த மின்சாரத்தை தென்மாநிலங்களின் மீது திணிப்பதற்குத்தான் இப்படி ஒரு சீர்திருத்தச் திட்டம்.
சீர்திருத்தமல்ல சதித்திட்டம்
முதலிடுவதற்கு முன்பே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டிருந்திருக்க வேண்டும். இதனோடு அந்த வடமாநிலங்களின் உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தையும் இணைத்து ஒன்றின் தேவையை இன்னொன்று பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிட்டு இருக்க வேண்டும். குறைந்த பட்சம் இந்தப் பிணையெடுப்பு பணத்தைக் கொண்டு அங்கே உற்பத்தியை முடுக்கலாம். இல்லையேல் மரபுசாரா எரிபொருள் சேமிப்பு தொழில்நுட்ப ஆய்வுக்கும் மேம்பாட்டுக்கும் செலவிட்டு உற்பத்திச் செலவைக் குறைத்து குறைந்த விலையில் சேமித்து அளிக்க முயற்சி செய்யலாம்.
மாறாக இந்த விலைக்கு இணையாக தென்மாநிலங்களின் மின்சார விலையை உயர்த்தச் சொல்கிறார்கள். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் விளம்பல் கட்டமைப்பைக் கைப்பற்றி அவர்களின் மின்சார உற்பத்தியை அழித்து இவர்களின் உற்பத்தியையும் அதற்கான சந்தையாக மாநில மக்களையும் மாற்ற நினைக்கிறார்கள். தொழிற்துறைக்கு அதிக விலையில் மின்சாரத்தை விற்று மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மலிவு விலையில் மின்சாரம் அளித்து மக்கள்நல நோக்கில் செயல்படும் தென்மாநிலங்களை அந்த மானியவிலை மின்சாரத்தை நிறுத்தச் சொல்கிறார்கள்.
குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் குறைகூலி ஏழைகளையும், விவசாயிகளையும், சிறுகுறு உற்பத்தியாளர்களையும் நட்டக் கொலை செய்து வெளியேற்றி அந்த உற்பத்தியையும் இவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள். சுருக்கமாக எஞ்சியிருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தின் மொத்த உற்பத்தியையும் இந்த நான்கைந்து முதலாளிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நூற்று ஐம்பது கோடி மக்களின் வாழ்வையும் இவர்களின் காலடியில் சமர்ப்பிக்கச் செய்யும் திட்டம்தான் இந்த மின்சார சீர்த்திருத்தச் சட்டம்.

உற்பத்தி மாற்றம் உடையும் ஆதிக்கம்
ஏனென்றால் இதுவரையிலும் பொருள்களின் உற்பத்தியையும் சரக்கு போக்குவாரத்தையும் அவற்றின் விலையையும் தீர்மானிக்கும் தளத்தகைச் சரக்காக (strategic commodity) எண்ணெய் இருந்து வந்தது. தற்போது மரபுசாரா மின்சாரம் மின்கலங்கள் சார்ந்த மாற்று உற்பத்தி, போக்குவரத்து எண்ணெய்யின் அந்தப் பாத்திரத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. அது இதுவரையிலுமான மூலதனக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டிருக்கிறது.
இது எண்ணெய் சார்ந்த அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தையும் அதன் ஆதிக்கத்தில் சென்றுவிட்ட ரூபாயின் நிலைத்தன்மையையும் உடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆதிக்க உடைப்பைத் தவிர்க்க அமெரிக்கர்கள் எண்ணெய்யிலேயே நிலைத்திருக்கும் முடிவை எடுக்கிறார்கள். அவர்களின் நெருக்கடியைத் தீர்க்க இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சந்தையைக் கேட்கிறார்கள். அதனால் முரண்பட்டு பாதிக்கபடும் இந்தியப் பார்ப்பனியப் பெருநிறுவன முதலாளிகள் மரபுசாரா மின் உற்பத்தி மாற்றத்தைக் கைக்கொண்டு அதற்கான இந்தியத் துணைக்கண்ட சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம் அமெரிக்கர்களை எதிர்கொண்டு இந்தியாவில் தமது மேலாதிக்கம் உடையாமல் தக்கவைக்கப் பார்க்கிறார்கள்.
எனவே இந்த மரபுசாரா மின் உற்பத்தியோடு சில்லுகளின் உற்பத்தியையும் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கொண்டுபோய்க் குவிப்பது வெறும் முதலாளித்துவ இலாப நட்ட கணக்கு மட்டுமல்ல. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, விளம்பல், சந்தை ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் அவர்களின் தயவில் வாழும் சுயமரியாதையற்ற அடிமைகளாக மாற்றும் பார்ப்பனிய மேலாதிக்கத் திட்டம்.

இப்போது தேர்தல்களில் தில்லுமுல்லுகள் செய்து பாஜக அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசுகளை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குவது வெறும் அதிகாரப் பசியல்ல. பார்ப்பனிய முதலாளிகளுக்கு மக்கள் சொத்தையும் பணத்தையும் ஒன்றியம் கொடுப்பதும் பதிலுக்கு அவர்கள் பாஜகவுக்கு பல ஆயிரம் கோடிகள் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்ற வைத்து இந்தப் பொருளாதார ஆதிக்கத்தைப் பெறுவதும் என்பதான பார்ப்பனியத்தின் அரசியல் பொருளாதாரம்.
அடிமைப்படுவதா? விடுதலை அடைவதா?
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம், சினிமா கவர்ச்சி நடிகரைக் களத்தில் இறக்கி ஊரில் உள்ள ஓட்டை உடைசல்களை அவரிடம் இணைத்து முழுமூச்சுடன் பாஜக செயல்படுவது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழக மக்களையும் பார்ப்பனியத்திடம் பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தும் பெரும் திட்டம் அதன்பின் இருக்கிறது. முந்தைய அதிமுக அடிமையாட்சிக் காலத்தில் உதய் மின்திட்டத்தில் இணைத்து மாநில மின்சார உற்பத்தியில் இருந்த தன்னாட்சியைக் குறிப்பிடத்தக்க அளவு இழந்தோம். இப்போது இந்தத் தேர்தலில் மாநில தன்னாட்சி பேசும் திமுகவை அகற்றும் போது பார்ப்பனியத்திடம் முற்றுமுழுதாக அவர்களிடம் இதனைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் அடிமைகளாக நம்மை விற்றுவிடும் அபாயம் இருக்கிறது.

பாஜக, அதிமுக, நடிகர் விஜய்யின் அரசியல் ஆதரவு சாதியக் கட்டமைப்பு உடைக்கப்படாத ஆதிக்கச்சாதி முதலாளிகள் கொலோச்சும் மேற்கிலும் கிராமப் புறங்களிலும் அதிகமாக இருக்கிறது. திமுக கூட்டணி வடக்கிலும் நகர்ப்புறங்களிலும் வலுவாக இருக்கிறது. திமுக அரசு தொடர்ந்து நகர்ப்புறக் கட்டமைப்பை மேம்படுத்தி நகரம் சார்ந்தே இயங்குகிறது. இந்த நகரமயமாக்கம் நகரம்சார் அரசியல் சாதியச் சமூக நீதியைச் சாதித்துவிடாது. நகரத்தைச் சுற்றி இருக்கும் பின்தங்கிய கிராமப் புறங்களில் சாதியச் சாக்கடை ஓடும்போது நகரங்களின் எப்படி சாதிய சமத்துவச் சந்தனக்காற்று வீசும்.
அந்தச் சாக்கடை இருக்கும் வரை இவர்களின் ஆட்டம் இருக்கவே செய்யும். அவர்களை வீழ்த்த வேண்டுமென்றால் கிராப்புறங்களை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் அப்படியான எந்தத் திட்டமும் இன்றி திமுக கூட்டணியின் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது என்ற குறுகிய எல்லையை மட்டுமே கொண்டிருக்கிறது. மாறும் உற்பத்தியை மனதில் கொண்டு அதன்மூலம் ஆதிக்க அரசியலில் இருந்து விடுவிக்கும் விடுதலைக்கான அரசியலாக இதனைக் கட்டமைக்க இவர்கள் தவறுகிறார்கள்.
ஒன்றியப் பெருமுதலாளிகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலைத் தொழிலாளர்களை உள்ளடக்கிய பெரும்பான்மையைத் தன்னுடன் இணைக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பொருளாதார கோரிக்கைகள் முழக்கம் இன்றி இருக்கிறார்கள்.
ஒன்றிய பார்ப்பனிய அரசு இந்த மரபுசாரா மின்உற்பத்தி மாற்றப் பலன்களைப் பெருநிறுவனங்களும் பணக்காரர்களும் மட்டுமே அனுபவிக்கும் வகையில் மாற்றுகிறது. அரசே மொத்தக் கொள்முதலாளராக இருப்பதால் அவர்களுக்கு உறுதியான நிலையான வருமானம் தரக்கூடியதாக இருக்கிறது.
அவர்களுக்கு எதிரான அரசியல் செய்யும் இவர்களின் நகர்வு இந்தப் பலன்களை கிராமப்புற உற்பத்தியாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதாக இருக்க வேண்டும். அப்படியான நகர்வு அந்த மக்களை இயல்பாக இந்தப் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலின் அங்கமாக மாற்றும்.

அதற்கு திமுக கூட்டணி மரபுசாரா மின்உற்பத்தியில் விவசாயிகளை இணைக்கும் வகையில் கூட்டு சூரிய மின்னாற்றல், மாற்று எரிவாயு உற்பத்தி, எண்ணெய் வித்துகளின் உற்பத்தி, பெண்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வழியான சூரிய மின்னாற்றல் தகடுகளின் கீழ் இயங்கும் நகரங்களுக்கான கூட்டு காய்கறி, மாமிசம், பால்பண்ணைகள் அது சார்ந்த உற்பத்தி ஆலைகள் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு நிலையான வருமானம்
தொழிலாளர்களுக்கு முறையான வேலை
என்பதை முழக்கமாக்கி எதிரிகளின் சதித்திட்டத்தை எடுத்துரைத்து அதன் பலன்களை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று உறுதியளித்து அணிதிரட்ட வேண்டும்.
அது தற்போது இலக்கின்றி சிதறிக் கிடக்கும் வாக்குகளை ஓரிடத்தில் குவிக்கும். குழம்பிக் கிடக்கும் அரசியலில் மீன்பிடிக்க முனையும் எதிரிகளை மக்கள் முன்னால் அம்பலப்படுத்தி தெளிவடைய வைத்து அவர்களை மாநிலத்தை விட்டே ஓடஓட விரட்டும். இந்தப் பொருளாதாரத் தற்சார்பு மற்றும் அதனைக் காக்கும் தன்னாட்சி அரசியலில் அடையும் வெற்றியும் அதன் பிறகான சரியான செயலாக்கமும் அவர்களின் ஆதிக்கத்தை ஒழித்து நமக்கு உண்மையான விடுதலையை அடைய வழிவகுக்கும்.
இந்த உற்பத்தி சார்ந்த உடைப்பும் பரவலும் ஒன்றிய பார்ப்பனிய அரசியல் பொருளாதார அதிகாரக் குவிப்பை உடைத்து அங்கே சமமான மாநிலங்களின் கூட்டாட்சி ஏற்பட வழிவகுக்கும். எனவே இது நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரலாற்று வாய்ப்பு. இதனை வெறும் தேர்தல் அரசியலாகச் சுருக்குவதா? இல்லை அடிமைப்படுவதா? போராடி விடுதலை பெறுவதா? என்ற உரிமை முழக்கமாக மாற்றுவதா? என்பது தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கையில் இருக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு:

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
