தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து அதனை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தயாரிப்பதற்கு குழு அமைத்து பணிகளை செய்து வருகின்றன.
இந்தநிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி தமிழ்நாடு சிறார் எழுத்தார்கள் கலைஞர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “
தமிழ்நாடு அரசு பபாசியுடன் இணைந்து ஆண்டு தோறும் ஏப்ரல்/ மே மாதக் கோடைவிடுமுறை நாட்களில் சென்னையில் ஒரு புத்தகக்கண்காட்சி நடத்த வேண்டும்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது போல சிறார் இலக்கியத்துக்கு அழ.வள்ளியப்பா விருது வழங்கவேண்டும்.
சாகித்ய அகாடமி விருதுகள் பாலசாகித்ய அகாடமி, யுவ புரஸ்கார், மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்களுக்கும் அரசு வீடுகள் வழங்க வேண்டும்.
சிறார் கலை இலக்கிய ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் தனியாக தமிழ்நாடு அரசு சிறார் கலை இலக்கியக் கழகம் தொடங்க வேண்டும். அந்தக் கழகம் ஒரு இந்திய ஆட்சித்துறை அதிகாரியின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும்.
சிறார் கலை இலக்கியக்கழகத்தில் சிறார் கலை இலக்கியம் தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்தும் ஆவணக்காப்பகமும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
சிறார் கலை இலக்கியக்கழகம் சார்பில் ஆண்டு தோறும் தேசியக் கருத்தரங்கமும், பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்கள் ஓவியர்கள், வடிவமைப்பாளர்களைக் கொண்ட வல்லுநர்குழுவை அமைத்து பள்ளிகளுக்கு சிறார் இலக்கிய நூல்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும்.
சிறார் கலை இலக்கியம் சார்ந்த பயிலரங்குகளை நடத்த வேண்டும்.
குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு ஆண்டு தோறும் விருது வழங்க வேண்டும்.
அனைத்துப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் சிறார் இலக்கியத்தை பாடமாக இணைக்க வேண்டும்.
சிறார் இலக்கியத்தில் சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க வேண்டும்.
நூலக பட்டய படிப்பு படித்த எண்ணற்ற இளைஞர்களுக்கு பள்ளிகளில் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்த வேண்டும்.
பள்ளி நூலகத்தை குழந்தை மைய நூலகமாக மாற்ற வேண்டும்.
வகுப்பறைகளுக்கு நடுவிலோ இடையிலோ நூலகம் இருக்கக் கூடாது. பள்ளி வளாகத்தில் தனியான ஒரு கட்டிடத்தில் நூலகம் இருப்பது குழந்தைகளுக்கு கூடுதல் மன அமைதியைத் தரும்.
நூலகத்தில் ஆசிரியர்கள் நூலகர்களாக இருக்கக் கூடாது. அது எப்போதும் குழந்தைகளுக்கு ஒரு பயத்தை கொடுக்கும். அது மட்டுமல்ல ஆசிரியர்களும் தங்களுடைய பணி அழுத்தத்தினால் குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருக்கவும் நேரிடும்.
நூலகங்களை கலை இலக்கிய திறன்களை வளர்ப்பதற்கான கலைக்கூடமாக மாற்ற வேண்டும்.
சிறார் நூலகங்கள் மற்ற நூலகங்களை போல அமைதியாகவோ மௌனமாகவோ இருப்பதை விட, அது எப்போதும் குழந்தைகளின் உயிர்த்துடிப்புள்ள ஆரவாரங்களினால் நிறைந்திருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கதை பாடல் ஓவியம் நுண் கலைகள் சினிமா என்று அனைத்து விதமான கலைகளைக் கற்றுக் கொள்ளும் அறிவுச்செயல்பாட்டு களமாக சிறார் நூலகம் மாற வேண்டும்.
சிறார் நூலகங்களில் அந்தப் பள்ளியில் படித்து சமூகத்தில் புகழ்பெற்றவர்களாக, உதாரண மனிதர்களாக, இருந்தவர்களையும் இருந்து கொண்டிருப்பவர்களையும் பற்றிய தகவல்களை ரத்தினச் சுருக்கமாக அவர்களுடைய புகைப்படங்களுடன் குழந்தைகளின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
எழுத்தாளர்கள்,கலைஞர்கள், ஓவியர்கள் விளையாட்டு வீரர்கள், அறிவியலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் தொழில் முனைவோர்கள் தொழில் அதிபர்கள் என்று அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற மாதிரி அந்த கண்காட்சி அமைய வேண்டும். அந்தப் பள்ளியில் படித்து புகழ்பெற்ற ஆளுமைகளை பள்ளிக்கு அழைத்து மாணவர்களிடம் உரையாட வைக்க வேண்டும்.
நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் புனரமைக்கவும் அங்குள்ள நூலகங்களில் இருக்கும் பழைய நூறாண்டு கண்ட நூல்களை மின்னூல் ஆக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி நூலகங்களில் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் ( அனிமேஷன் மாதிரியான ) புத்தகங்களின் அலமாரிகளும் வாசிப்பு மேசைகளும் நாற்காலிகளும் அமைக்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் நூலகம் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பதை ஆசிரியர்கள் உணர்வதற்கு அவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் குழந்தைகளுக்குக் கதை சொல்ல கதைசொல்லிகளையும் நாடகப்பயிற்றுநர்களையும் பணியமர்த்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலக்கியமாமணி விருதுகளில் ஒரு விருது சிறார் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
உலகியல் கவலைகளின்றி படைப்புகளை உருவாக்க இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் எழுத்தாளர்களுக்கு உண்டு உறைவிட படைப்பு மையம் உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் சிறார் கலை இலக்கிய மாநாடுகளை நடத்த வேண்டும்.
பன்னாட்டு எழுத்தாளர்களையும், சிறார் கலைஞர்களையும், தேசியச் சிறார் எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அழைத்து கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.
சிறார் நாடகங்களை உருவாக்க, பயிற்சி கொடுக்க, இலவசமாக அரசு சமுதாயக் கூடங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் சிறார் நாடகவிழா நடத்த அறிவுறுத்த வேண்டும்.
அரசு வெளியிடும் சிறார் நூல்கள் அரசுப்பள்ளிகளில் மட்டுமல்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் வெளியிலும் விற்பனைக்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வாசிப்பு இயக்க நூல்களும் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மாவட்டம் தோறும் தனியாகச் சிறார் நூலகம் அமைக்க வேண்டும். அதேபோல சிறார் பண்பாட்டு மையம் தொடங்கி ஆர்வமிருக்கும் சிறார்களுக்கு கலை இலக்கிய நுண்கலைப்பயிற்சிகளை வழங்க வேண்டும்.
மாவட்டப் புத்தகத்திருவிழாக்களில் சிறார் அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட மைய நூலகங்களிலும் கிளை நூலகங்களிலும் ஆண்டு முழுவதும் சிறார் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
