தேர்தல் ஆணையர்கள்.. கர்ணன்களோ அவர்கள் –ஏன் இந்த சட்டக் கவசம்?

Published On:

| By Mathi

Election Commission Article

அ. குமரேசன்

ஜனநாயகத்தில் குடிமக்கள்தான் எசமானர்கள் என்று அவ்வப்போது  பேசப்படுவதைக் கேட்பதற்கு சுகமாகத்தான் இருக்கிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அவர்களது பணியாளர்கள் என்று கூறப்படுகிறபோது கொஞ்சம் கம்பீரமாகவும் இருக்கிறது. ஆனால், எசமானர்களைப் பணியாளர்களால் அலைக்கழிக்க முடிகிறது. எடுத்துக்காட்டுக்காக  –முன்பு ஆதார் அட்டைக்காக அலைமோத விட்டார்கள்; இப்போது  வாக்குரிமையைத தக்க வைத்துக்கொள்வதற்குத் தவிக்க வைக்கிறார்கள்.

ADVERTISEMENT

பிகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) ஏவப்பட்டதைத் தொடர்ந்து, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக வந்த முதல் செய்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எப்படியோ, எல்லா மாநிலங்களிலும் எசமானர்களை விண்ணப்பப் படிவங்கள் பதற்றத்தால் நிரப்பிக்கொண்டிருக்கின்றன.

இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்களில் பணி அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளால் 41 பேர் (இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரையில்) மரணமடைந்த செய்தியும் பதற்றத்தைத் தருகிறது. இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்று நாடே எதிர்பார்த்திருக்கிறது.

ADVERTISEMENT

ஒருவேளை, மக்களுக்கு மன உளைச்சலைத் தந்திருக்கும் இந்த நடவடிக்கை தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக வைத்துக்கொள்வோம். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல, ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இப்படி சிறப்பாகத் தீவிரமாகத் திருத்தப்படுகிறது என்று நிறுவப்படுவதாகவும் வைத்துக்கொள்வோம். அப்போது, இத்தகைய நடவடிக்கையை எடுத்த தேர்தல் ஆணையர்கள் மீது நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும்? எந்த நடவடிக்கையும் எடுக்காது, எடுக்க முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து ஆணையர்களை, கர்ணனுக்கு இருந்தது போன்ற புதிய சட்டக் கவசம் பாதுகாக்கிறது.

வழக்குக்கு விலக்கு

ADVERTISEMENT

‘தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிலைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டம்’ இரண்டாண்டுகளுக்கு முன்  கொண்டுவரப்பட்டது. வழக்குகளிலிருந்து தேர்தல் ஆணையர்களுக்கு விலக்களிக்கும் வகையில் இந்தச் சட்டத்தில், பிரிவு 16 சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு, தலைமைத் தேர்தல் ஆணையரும் ஆணையர்களும் பதவியில் இருக்கிறபோதோ, பதவி ஓய்வுக்குப் பிறகோ, பணிக்காலத்தில் அதிகாரப்பூர்வமாக எடுத்த முடிவுகள், மேற்கொண்ட செயல்கள், பேசிய வார்த்தைகளுக்காக அவர்கள் மீது  குற்றவியல் அல்லது உரிமையியல்  வழக்குத் தொடரவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்கிறது. 2023இல் இப்படியொரு புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கும், அதன் பிறகு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்று பாமர ஜனநாயக மனம் குழம்பத்தான் செய்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று (டிசம்பர் 9) நாடாளுமன்ற மக்களவையில், எஸ்ஐஆர் பற்றிய விவாதத்தின்போது, இந்தச் சட்டப் பிரிவைச் சுட்டிக்காட்டினார். அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு இது வழிவகுக்கும் என்று கூறிய அவர் இதை மாற்ற வலியுறுத்தினார். வேறு பல கட்சிகளும் இதைக் கோருகின்றன.

சுதந்திர இந்தியாவின் அடித்தளமாகிய அரசமைப்பு சாசனம், சட்டத்தின் முன் அனைவரும் சமமென்று உறுதிப்படுத்துகிறது. எந்தத் துறையைச் சேர்ந்தவர்களானாலும் தங்களின் அலுவல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டியவர்களே என்றுதான் நம்புகிறோம். அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகிய காரணங்களாலும, சாட்சிகளை வளைக்கும் வழிகளாலும் தப்பித்துக்கொள்வது வேறு விவகாரம். ஆனால் சட்டப்பூர்வமாகத் தப்பிக்க முடியாது. தீர்ப்பளிக்கும் நீதிபதிகளுக்குக் கூட இதில் விலக்களிக்கப்படவில்லை. அரசமைப்பு சாசனத்தின் மீது மரியாதையை ஏற்படுத்தும் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

விநோத முரண்

இதில் ஒரு வேடிக்கை முரண் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று ஒன்றிய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் ஒரு சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தார். அறிமுக நிலையிலேயே, பாஜக பிடியில் சிக்காத மாநிலங்களின் முதலமைச்சர்களையும் அமைச்சர்களையும் குறி வைத்தே இது கொண்டுவரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, பி.பி. சவுத்ரி  தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அது அனுப்பப்பட்டுள்ளது. உள்நோக்கமுள்ள சட்ட முன்வரைவுக்கான குழுவில் பங்கேற்க விரும்பவில்லை என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்  விலகிவிட்டார்கள்.

130ஆவது சட்டத் திருத்தத்திற்கான அந்த முன்வரைவு,  குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் 30 நாட்கள் இருப்பார்களானால் அவர்களின் பதவிகள் தாமாகவே காலியாகிவிடும் என்கிறது. அதில் பிரதமரும் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஒன்றிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள்  சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

தேசிய தலைநகர வட்டாரமான தில்லி ஒன்றியப் பகுதி  அரசின் முதலமைச்சர், அமைச்சர்களுக்கு இதைச் செயல்படுத்தும் 131ஆவது சட்டத் திருத்த முன்வரைவு, இதர ஒன்றியப் பகுதிகளுக்கான 132ஆவது சட்டத் திருத்த முன்வரைவு ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒன்றிய ஆளுங்கட்சியல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நெருக்கடி கொடுக்கிற உள்நோக்கத்தை மறைப்பதற்காகவே ‘பிரதமரே சேர்க்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்’ என்று காட்டப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்கின்றன.

இன்னொரு வேடிக்கை

இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. பிரதமரும், முதலமைச்சர்களும் அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகத் தடையின்றித் தொடர்வார்கள். ஆகவே, சிறையில் 29 நாட்கள் வரையில் ஒருவர் அமைச்சராகவே இருப்பார். 30ஆவது நாளில் தானாகப் பதவி நீக்கமாவார். 31ஆவது நாள் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் பிரதமராக, முதல்வராக, அமைச்சராகப் பதவியேற்பார். அதுவரையில் சும்மா ஓரிரு நாட்கள் விடுமுறை, அவ்வளவுதான்! இது தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்கள் மீதான பரிகாசம் இல்லையா?

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களின் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று கருதும் நிலையில் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்குத்  தேவை என்று நெடுங்காலமாக இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். தேர்தல் சீர்திருத்தத்தைப் பொருளுள்ளதாக்கும் இந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை, ஆனால் இப்படி தானியங்கிப் பதவி நீக்க விநோதத்தைச் சட்டமாக்குவதற்கு அவசரம் காட்டப்படுகிறது. இது ஏனென்று  கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்கான கோரிக்கை எந்த மூலையிலிருந்தாவது வந்ததா என்றும் தெரியவில்லை.

பிரதமரையும் ஒன்றிய அமைச்சர்களையுமே கூட  பதவி நீக்கத்திற்கு உட்படுத்துகிற அளவுக்கு “முற்போக்கான” சட்ட முன்வரைவைக் கொண்டுவந்திருக்கிற நரேந்திர மோடி அரசு, தேர்தல் ஆணையர்களுக்கு மட்டும் குற்றவியல், உரிமையியல் வழக்குகளிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும் விலக்களிப்பது எத்தனை நயமிகு முரண்!

இந்த வழக்கு விலக்குப் பிரிவு, தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே என்று கூறப்படுகிறது. அப்படியானால் இதர துறைகளில் –நீதிபதிகள் முதல் காவல்துறையினர், முப்படையினர், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அத்தனை அலுவலர்கள் வரையில்– அடிமையுணர்வோடும் அச்சத்தோடும் செயல்பட வேண்டுமா?

அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கான சட்டப் பொறுப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களாகத் தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழி செய்யப்பட்டாலும், உண்மையில் தேர்தல் ஆணையம் என்ற அமைப்புதான் தனது சுதந்திரத் தன்மையை இழக்கிறது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

புறக்கணிக்கப்படும் புகார்கள்

கடந்த காலங்களில், தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டாமா என்ற கேள்வியோடு, பல விதிமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் முன்னுக்கு வந்திருக்கின்றன. ஒன்றிய ஆளுங்கட்சிக்கு சாதகமாகத் தேர்தல் கால அட்டவணை தயாரிக்கப்பட்டது, தாமதமாக அறிவிக்கப்பட்டது, தேர்தல் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடும் நிலையில் ஆளுங்கட்சியினரின் பல அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது அல்லது போதிய வேகத்துடன் செயல்படத் தவறியது, சமநிலையுடன் அணுகாதது, வெறுப்புப் பேச்சுகளைத தடுக்க மறுத்தது….. இவ்வாறான வேறுபல புகார்களும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆணையர்களின் முறைகேடுகள் அல்லது அதிகார மீறல்கள் என்று வகைப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் நடுநிலை தவறிய செயல்கள் அல்லது செயலின்மைகள் என்று கூற முடியும்.

ஜனநாயக அறம் என்ற அடிப்படையில் பார்த்தால், நடுநிலை தவறுவது பெரிய குற்றம். ஒரு நீதிபதி நடுநிலை தவறி, ஒரு பக்கச் சார்புடன் விசாரணையை நடத்தினால் அது குற்றச் செயலாகிறது. தேர்தல் ஆணையர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், உள்நோக்கத்துடன் செயல்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்கிறது புதிய சட்டம். அப்படியானால், எதிர்காலத்தில் அவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள், யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று அறிவிக்கிறார்களா?

மற்ற நாடுகளில்

உலகில் ஜனநாயமும் முடியாட்சியும் சேர்ந்த கலப்பு வகை அரசுகளும், ஒட்டு மொத்த ஒற்றையதிகார அரசுகளுமாக 96 நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளிலும் தேர்தல் என்பதாக ஏதோ நடத்தப்படுவது உண்டு. ஆனால் அந்தத் தேர்தல்களில் சுதந்திரம், நடுநிலை போன்றவை அந்நிய வார்த்தைகளே. அவற்றை ஒதுக்கிவிடுவோம். இந்தியா உட்பட மற்ற பல நாடுகள் ஜனநாயகத்  தேர்தல் முறையைக் கொண்டுள்ளன. முழுமையான ஜனநாயகம் 25 நாடுகளிலும், குறைபாடுகளுடன் கூடிய ஜனநாயகம் 46 நாடுகளிலும் இருக்கின்றன.

மற்ற ஜனநாயக நாடுகளில், தேர்தல் ஆணையர்களுக்கும்,  அலுவலர்களுக்கும், அவர்கள் நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளும் முடிவுகளுக்காக, உரிமையியல் வழக்குகளிலிருந்து விலக்களிக்கும் சட்டங்கள் உள்ளன. ஆனால் அந்த விலக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மட்டும்தான். உள்நோக்கச் செயல்பாடுகள் தண்டனைக்கு உரியவையே.  சில நாடுகளில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசின் அனுமதி தேவை என்று இருக்கிறது, வழக்குகளுக்குத் தடையில்லை.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஏற்பாடுதான். ‘ஐரோப்பிய மன்ற வெனிஸ் ஆணையம்’ என்ற ஒரு கூட்டமைப்பு இருக்கிறது.  தேர்தல் உள்பட  நிர்வாக நடைமுறைகளுக்கு வழிகாட்டுகிற அந்த அமைப்பில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. பார்வையாளர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. என்ன பார்த்தார்களோ தெரியவில்லை, அந்த நாடுகளில் இல்லாத சட்டத்தை இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள்!

அது நடக்கட்டும்

குறிப்பாக இந்தச் சட்டத்தின் 16ஆவது விதி,  பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கும் பொறுப்பிலிருந்தே தேர்தல் ஆணையர்களை விடுவிக்கிறது என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள்,  சட்டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்தே எதிர்த்து வந்துள்ளன. அற நியாயங்களுக்குச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், நாடாளுமன்றப் பெரும்பான்மை என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது. இப்படியொரு சட்டக் கேடயம் தரப்படுகிறதென்றால், பதிலுக்கு என்ன எதிர்பார்க்கப்படுகிறது? சுதந்திரமான, அச்சமற்ற செயல்பாடுதானா?

தவறே செய்திருந்தாலும் வழக்குத் தொடுக்க முடியாது என்ற காப்புதான் இன்று  விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  தேர்தல் ஆணையம் வாய்திறக்காது என்றாலும், நாட்டு மக்கள் தங்களுடைய உரிமை தொடர்பானது என்ற உணர்வோடு இந்த விவாதத்தில் இணைய வேண்டும்.

எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும், அப்போது, இந்தச் சட்டம் முன் தேதியிட்டுத் திருத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேசியிருப்பது கவனத்திற்குரியது.  இதன்மூலம், ஏற்கெனவே செய்த தவறுகளுக்காகவும் நடவடிக்கை எடுக்க, அந்தத் தவறு தொடராதிருக்க வழி திறக்கப்படும். ஜனநாயகம் காக்கப்படும். இந்த மாற்றத்தை உறுதிப்படுத்த அது நடக்கட்டும் –ஆட்சி மாற்றம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share