ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்ப்பது பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கட்சிகளை இணைத்து வருகின்றன.
இந்தநிலையில் ராமதாஸ் தரப்பு பாமகவும், தேமுதிகவும் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேசமயம் திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
இதுதொடர்பாக திண்டுக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸும் எங்களிடம் பேசவில்லை, எங்கள் தலைவரும் அது குறித்துப் பேசவில்லை. இதுவரை அப்படி ஒரு முயற்சியே எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
அவரிடம் ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால், திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஐ.பெரியசாமி, “அது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களை பொறுத்தவரை கூட்டணி வலுவாக இருக்கிறது” என்றார்.
