சனாதன, சர்வாதிகார சங்கிலிகளை நொறுக்கி தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான் என்று மநீம தலைவர் மாநிலங்களவை எம்.பி நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.
சென்னையில் நடிகர் சூர்யா- நடிகை ஜோதிகா நடத்தும் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டு தொடக்க விழா இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள், கல்வி- வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவர்களான 20 மாணவர்களில் 10 பேர் மேடையேற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர்.
இந்த விழாவில் கமல்ஹாசன் எம்பி பேசியதாவது: இந்த மேடையில் பார்க்கும் டாக்டரை அடுத்த ஆண்டு பார்க்க முடியாது. இது நீண்ட நதி என்பதால் சொல்கிறேன்.
இந்த ஆண்டு டாக்டர்களைப் போல அடுத்த ஆண்டு டாக்டர்களைக் காட்ட முடியுமா? என்பதில் ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது. ஏனெனில் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு இவர்களால் (அகரம் பவுண்டேஷனால்) இந்த முயற்சியைத் தொடர முடியவில்லை. இப்ப புரிகிறதா ஏன் நீட் வேண்டாம் என்கிறோம் என்பது?
2017-ம் ஆண்டு முதல் இந்த மாதிரி அத்தனை பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த சட்டம். அகரம் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அந்த சட்டத்தை மாற்றி எழுதக் கூடியது கல்விதான்.
இந்தப் போரில் அந்த கல்விதான், ஆயுதம் இல்லாமல் நாட்டையே செதுக்கவல்லது. சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளக் கூடிய ஒரே ஆயுதம் இதுதான்.. (கல்வி) இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீங்க. அதில் வெல்ல முடியாது. ஏனெனில் பெரும்பான்மை தோற்கடித்துவிடும். ஆகையால்தான் நாம் அனைவரும் தாங்கி பிடிக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் எம்பி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.