தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசைக் கண்டித்து 4 நாட்களாக தாம் மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய பாஜக அரசு தர மறுக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் வலியுறுத்தினர். உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில், கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை சசிகாந்த் செந்தில் தொடர்ந்தார்.
அவரது இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்த போதும், உடல்நலன் கருதி போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தி இருந்தனர். இதனை ஏற்று சசிகாந்த் செந்தில் தமது 4 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று இரவு (செப்டம்பர்1) முடித்துக் கொண்டார்.