என்.டி.ஏ பொதுக்கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறாதது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக போஸ்டர்களும், கட் அவுட்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இதில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் தான் தற்போது அதிமுகவினரை அதிருப்தியடைய வைத்துள்ளது.
அதில் ஒரு பக்கம் எம்.ஜி.ஆர், இன்னொரு பக்கம் ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ளது. போஸ்டருக்கு மேல் வரிசையில், ‘மோடி, அமித்ஷா, நிதின் நபின், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவரிகளின் படம் இடம்பெற்றுள்ளது. ஆனால் என்.டி.ஏ கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் படம் மிஸ் ஆகியிருப்பது, கூட்டம் தொடங்க இருக்கும் நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியிலேயே இப்படியா? என கூட்டத்துக்கு வருபவர்கள் பேசி செல்கின்றனர்.
தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து பேசி வருகிறார்.
ஏற்கனவே கடந்த முறை கூட்டத்தின் போது பெரியார் படம் வைக்கப்பட்டு மீண்டும் எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
