அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7-ந் தேதி தொடங்கும் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை தாமும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். Edappadi Palaniswami BJP
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் SRM கல்லூரி வளாகத்தில் பாஜக மாநில பூத் நிர்வாகிகள் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை ஏற்க, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிவாகிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைகளும் பயிற்சிகளும்
மண்டல வாரியாக 2600-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த பயிலரங்கத்தில் பங்கேற்றனர். மக்களவைத் தொகுதி வாரியாக 7 மாவட்டங்களை மையப்படுத்தி கிளை மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதே போல பெண்களுக்கான முன்னுரிமை, பூத் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
டார்கெட் 47 லட்சம் விவசாயிகள்
இந் நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன், தமிழ்நாட்டில் 47 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டுமே 1800 கோடி ரூபாய் மீனவர்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் நிதி வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் மீனவர்கள் நேரடியாக பிரதமரின் திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள். மத்திய அரசின் பயனாளிகளை நேரடியாக எப்படி தொடர்பு கொள்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும், பயனாளிகளை சந்திக்க வேண்டும். 47 லட்சம் விவசாயிகளுடனும் நேரடி தொடர்பாக இருக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும், ஏதாவது ஒரு வீட்டில், ஏதாவது ஒரு திட்டத்தில் மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள். பயனாளிகளை நேரடியாக நாம் அனைவரும் சந்தித்து, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்வோம் என்றார்.

எல்லாம் ஓரணியில்தான் இருக்கிறோம்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், முருக பக்தர்கள் மாநாட்டினால் இன்றைக்கு அகில இந்தியாவே அசந்து போயிருக்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி நடத்தினாலும் கூட, அதனை சிறப்பு செய்தது பாஜக. தமிழகத்தை ஓரணியில் திரட்டுவதற்கு என்ன இருக்கிறது? தமிழகம் ஓரணியில்தான் இருக்கிறது? நாமெல்லாம் ஓரணியில் தான் இருக்கிறோம்! நமக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தானே?
அமித்ஷா பார்த்து கொள்வார்
சென்னையில் உள்ள அனைத்து ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் கொக்கேன், மெத்தபேட் போதைப் பொருட்கள் விற்பனையாகின்றன. 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். அதற்கான வியூகங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்த்துக் கொள்வார்.
திமுக ஆட்சியில் தொடர்ந்தது இல்லை
எனக்கு தெரிந்த வகையில் திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்ததாக இல்லை, என்றைக்கும் மக்கள் சக்தியுடன் திமுக வென்றதில்லை. கடந்த தேர்தலில் பாஜக அதிமுக பெற்ற வாக்குகளை கூட்டினால் மொத்தமாக 24 லட்சம் ஓட்டுத்தான் திமுக அதிகம். அதை சட்டமன்ற தொகுதியாக பிரித்தால் 11000 ஓட்டு, அதையே பூத்தாக பிரித்தால் 37 ஓட்டுத்தான் நமக்கு தேவை.
தனிமரம் தோப்பாகாது- 2029 தான் இலக்கு
முன்னாள் மற்றும் இந்நாள் மாவட்ட தலைவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும், தனிமரம் தோப்பாகாது, பல மரங்கள் இணைய வேண்டும். இந்த கட்சிக்கு இத்தனை ஆண்டுகள் பணியாற்றி உள்ளோம். நம்முடைய நோக்கம் 2026 கிடையாது, 2029 மக்களவைத் தேர்தல் தான்.
அதிமுக தேடி வந்து அழைக்க வேண்டும்
தமிழ்நாட்டில் இருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பது தான் நமது இலக்கு. பலம் அதிகரிக்கும் போது நாம் தான் மேலே இருப்போம். நீங்களும் MLA ஆக வேண்டும், MP ஆக வேண்டும் என்று சிந்தியுங்கள் இனி அதிமுக காரர்கள் உங்களை வந்து அழைக்கும் படி பலமுடன் இருக்க வேண்டும். நீங்கள் வளர்ந்து உங்கள் பலத்தை காட்டினால் தானே சீட் கிடைக்கும்.
4-வது இடத்தில் இந்தியா
உலகக் நாடுகளுக்கு மேல் நம் நாட்டை வளர்ச்சி அடைய செய்துள்ளார் பிரதமர் மோடி ஏழ்மையில் 14.2 சதவீதம் இருந்தது 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி. பொருளாதாரத்தில் 4 வது இடத்தில் இருந்து வருகிறது இந்தியா.
எடப்பாடி பழனிசாமி பயணத்துக்கு ஆதரவு
கோவை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7-ந் தேதி சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். நான், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று இந்த பயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறோம். மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும், அவர்கள் எங்கெல்லாம் வருகிறார்களோ, அங்கெல்லாம் ஆதரவு தெரிவியுங்கள். இதில் எல்லோரும் கலந்துகொண்டு பலத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஈரான் தமிழர்கள் மீட்பு
ஈரானில் இருந்து 15 தமிழர்களை 15 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்து பாஜக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துகொண்டு இருக்கிறது, இன்று ஜூலை 6-ந் தேதி இரவு அவர்களை வரவேற்க நாங்கள் செல்கிறோம். பாஜக தமிழ் மக்களுக்காக, தமிழுக்காக உழைக்கின்ற கட்சி. திமுகவாக இருந்தால் சால்வையை போட்டு நாங்கள் தான் செய்தோம் என சொல்லி விடுவார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.