தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) தொடங்கி வைத்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் சென்று வரவேற்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதில், கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த நிலையில் இன்றைய தினம் தனது மனுவில் “மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு தமிழக மக்கள் சார்பாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அதில், “ இயற்கை விவசாயத்திற்கான அத்தியாவசிய உள்ளீடுகளை – மண்புழுக்கள், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் – அதிக மானிய விலையில் வழங்க வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேங்காய் மற்றும் தக்காளி, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம், டெல்டா மாவட்டங்களில் நெல், திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழை, பல மாவட்டங்களில் கரும்பு போன்ற ஒவ்வொரு முதன்மை பயிரும் தனித்தனியாகக் கருதப்பட வேண்டும், இந்தப் பயிர்களின் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தனிப்பயனாக்கப்பட்ட மானியங்கள் வழங்கப்பட வேண்டும். கூடுதலாக, இயற்கை வேளாண்மை வளர்ப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை மானியங்களை வழங்குவதோடு, அரசு மூலம் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
விவசாய மற்றும் வீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப் செட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் மற்றும் கவர்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான 18 சதவீதம் ஜிஎஸ்டி விகிதத்தையும் 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும்
கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயம்புத்தூர்-ராமேஸ்வரம் ரெயில் பாதையை மீட்டமைக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே புதிய இரவு நேர ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
