2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஜூலை 7-ந் தேதி முதல் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். Edappadi Palaniswami
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார்?, கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பது தொடர்பான சலசலப்புகள் நீடித்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று ஜூலை 7 திங்கள்கிழமை முதல் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
இன்று காலை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். இந்த சுற்றுப் பயணத்தை தாமும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தொடங்கி வைப்போம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக பிளாக் தண்டர் முதல் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் காந்தி சிலை வரை ரோடு ஷோவையும் எடப்பாடி பழனிசாமி நடத்தி பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிமுகவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. சேலத்தில் இருந்து கோவைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.