ADVERTISEMENT

நீதிமன்ற உத்தரவு : எடப்பாடி பயண திட்டத்தில் மாற்றம்!

Published On:

| By Kavi

நீதிமன்ற உத்தரவு காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

இந்த சம்பவத்துக்கு போலீசார் சரியான இடம் கொடுக்காததே காரணம் என்று அக்கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவித பொதுக்கூட்டங்களையும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த சூழலில் தான் எடப்பாடி பழனிசாமியின் பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

நாளை மாலை திருச்செங்கோடு அண்ணா சிலை அருகிலும் அதன் பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். 

ADVERTISEMENT

நாளை மறுநாள் நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகிலும், பரமத்தி வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர் – போத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக இருந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

நீதிமன்ற உத்தரவு காரணமாக இவர்கள் தேர்வு செய்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். 

இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நாமக்கல் மற்றும் ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அதிமுக அறிவித்துள்ளது. 

வரும் 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய பகுதிகளிலும், 9ஆம் தேதி நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியிலும், 10ஆம் தேதி ஈரோடு மாநகர் மொடக்குறிச்சி (ஈரோடு கிழக்கு) பகுதியிலும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது மழை காரணமாக அக்டோபர் 5, 6ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இரண்டாவது முறையாக நாமக்கல் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share