டெல்லியில் அமித்ஷா வீட்டில் இருந்து கிளம்பிய எடப்பாடி பழனிசாமி முகத்தில் கைக்குட்டையை வைத்து மூடியவாறு சென்றது பேசு பொருளாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து ஹரித்துவாருக்கு செல்வதாக செய்தியாளர்களிடம் கூறிய செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் 8ம் தேதி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வந்தார்.
அப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறியதாக செங்கோட்டையன் பேட்டியளித்து இருந்தார்.
இந்த சூழலில் அதிமுகவில் என்ன செய்ய வேண்டும் என்று அமித்ஷா முடிவெடுக்க வேண்டுமா என திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்தன.
இந்த சூழலில் தொடர் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லி சென்றதாக எடப்பாடி சார்பில் கூறப்பட்டாலும், அவரது இந்த பயணம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
சுமார் இரவு 8.15 மணியளவில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், தம்பிதுரை, கேபி முனுசாமி நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை, தனபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர்.
இந்த நிலையில் மூத்த நிர்வாகிகள் அமித்ஷா இல்லத்தில் அரை மணி நேரம் இருந்த நிலையில் அவர்கள் கிளம்பி சென்று விட்டனர்.
பின்னர் சுமார் 25 நிமிடம் எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும் அமித்ஷா ஆலோசனை செய்திருக்கிறார்.
இனோவா காரில் அமித்ஷா வீட்டுக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி பேசி முடித்துவிட்டு திரும்பும் போது பென்ட்லி காரில் அவர் மட்டும் சென்றுள்ளார்.
வழக்கமாக முன் இருக்கையில் அமரும் எடப்பாடி பழனிசாமி இப்போது பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு முகத்தில் கைக்குட்டையை கொண்டு மூடியவாறு புறப்பட்டுள்ளார்.
அவர், ஏன் முகத்தை மூடியபடி சென்றார் என்பது தற்போது இணையத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.