ADVERTISEMENT

டெல்லியில் அமித்ஷாவை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

Published On:

| By Mathi

EPS AmithSha

டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 16) இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி விவகாரம், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிப்பார் என்கின்றன டெல்லி தகவல்கள்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் கலகக் குரல். இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி, சசிகலா ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஆனால், எடப்பாடி பழனிசாமி இதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இந்த கலகக் குரல் எழுப்பிய செங்கோட்டையனின் கட்சி பதவிகளையும் பறித்துவிட்டார்.

மேலும், டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை குறித்து அமித்ஷாவிடம் செங்கோட்டையன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவில் செங்கோட்டையன் எழுப்பிய கலகம், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து அமித்ஷாவுடன் விரிவாக பேச இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கின்றன டெல்லி தகவல்கள்.

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த டெல்லி பயணத்துக்காக, எடப்பாடி பழனிசாமியின் தருமபுரி பிரசார பயணமும் மாற்றி அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தன்மானத்தை விட்டு தரமாட்டோம்

முன்னதாக நேற்று சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதாக எழுதுகிற பத்திரிகையாளர்களே! எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம்.. அதில் இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கமாட்டேன் என்றார். மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு துரோகம் செய்தால் நடுரோட்டில்தான் நிற்பார்கள் என செங்கோட்டையனுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share