“விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளி தான்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளை பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 22) தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ நாளொன்றுக்கு 2000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் சொன்னார். ஆனால் 900 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவையும் இங்கிருந்து லாரிகளில் ஏற்றி செல்லாமல் குடோன்களில் அடுக்கி வைத்திருப்பதால், புதிதாக வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடமில்லை.
இதன் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்வதெல்லாம் பொய். இந்த தீபாவளி விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளிதான்” என்று கூறினார்.
தஞ்சையை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
