ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையம் கிராமத்தில் இன்று (ஜனவரி 27) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் விளையாட்டு போட்டியின் போது முக்கிய வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
“ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளால் முட்டப்பட்டு எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்வதற்காகப் பதிவு செய்துள்ள அனைத்து ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் காப்பீடு செய்து கொடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, போட்டிகளில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் காப்பீடு செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.
