எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணி, முனுசாமி ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இன்று (மார்ச் 25) டெல்லி செல்லவுள்ளனர். Edappadi palaniswami Amit Shah meeting
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறி வந்தனர்.
இந்த நிலையில், திமுகவை தவிர எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமியும், அதிமுக எங்களுக்கு எனிமி இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற வேலுமணி மகன் இல்ல திருமண விழாவில் பாஜக தலைவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிரித்து பேசினர்.
அதுபோன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு உறுப்பினர் காயத்ரி தேவி மகள் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியும் எச் ராஜாவும் சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீரென இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி தரப்பிலிருந்து நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, அமித்ஷாவும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். இன்று (மார்ச் 25) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் கொடுத்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாமல் காலை 9.30 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இன்று காலையில் சட்டபேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்ட வேலுமணி, முனுசாமி ஆகிய முன்னாள் அமைச்சர்களும் மதியம் ஒரு மணியளவில் அங்கிருந்து புறப்பட்டனர். இவர்கள் இன்று மாலை 4 மணிக்கு விமானத்தில் டெல்லி செல்கின்றனர்.
ஏற்கனவே அதிமுக ராஜ்ய சபா எம்.பி.க்கள் சிவி.சண்முகமும், தம்பிதுரையும் டெல்லியில் உள்ளனர். இதில் தம்பிதுரை நன்றாக இந்தி பேசக்கூடியவர்.
அடுத்தடுத்து அதிமுகவினர் டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், இது அரசியல் ரீதியான சந்திப்புதான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின் போது, தொகுதி மறுவரையறையை 2026ல் நடத்த வேண்டாம், அதனை தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு கொடுக்க உள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக, தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கும் நிலையில், இன்று காலை சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லியில் அவர் யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கிற நேரத்தில் இருமொழி கொள்கை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Edappadi palaniswami Amit Shah meeting