மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஹோட்டல் ஒன்றில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், மாநில கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை தற்போது நடத்தி வருகிறார். இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றுள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, எஸ்பி. வேலுமணி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தற்போது (செப்டம்பர் 16) ஆலோசனை நடத்தி வருகிறார். ‘சிந்தனை அமர்வு’ என்ற பெயரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமக்கு காய்ச்சல் இருப்பதால் தம்மால் கூட்டத்துக்கு வரவில்லை என காலையில் பிஎல் சந்தோஷிடம் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணாமலை வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்துவிட்டு சில விஷயங்களை பேசினாரம் பிஎல் சந்தோஷ்.
பிஎல் சந்தோஷ் சந்தித்துவிட்டு சென்ற நிலையில், ஈசிஆர் சாலையில் நடைபெறும் தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலையும் தற்போது பங்கேற்றுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தொடர்பான ஆலோசனைகளை இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை முன்வைத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில், திமுக- அதிமுக- தேமுதிக- பாமக உள்ளிட்ட கட்சிகள் எப்படி எல்லாம் தேர்தலை எதிர்கொள்கின்றன? தேர்தல் பிரசாரங்களை நடத்துகின்றன? பாஜகவும் எப்படி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்? என்பதை Power Point மூலம் விளக்கினார் அண்ணாமலை.
கர்நாடகாவை சேர்ந்த பிஎல் சந்தோஷ்தான், அண்ணாமலையை பாஜகவுக்குள் கொண்டு வந்தவர்; அண்ணாமலைக்கு பாஜகவில் பக்க பலமாக இருப்பவரும் பிஎல் சந்தோஷ்தான். அதனால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.