வைஃபை ஆன் செய்ததும், “சாட்டையை கையில் சுழற்றினால் சாத்திரங்களும் சுழலுமோ”என்றபடி யே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. புரியாத புதிரா பேசுறீரு?
அரசியல்ல அதுதானே நடக்குது.. அதிமுக சீனியரான திண்டுக்கல் சீனிவாசன் நேத்து கொடுத்த பேட்டியை பார்த்தீரா?
திருச்சி மோடி மீட்டிங்குக்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன்கிட்ட பத்திரிகைகாரங்க மைக் நீட்டின உடனே பதறிப் போன திண்டுக்கல் சீனிவாசன், “இப்பதான் நான் வர்றேன்.. ஏய்ய் இருப்பா.. என்னை மாட்டிவிட்டு கட்சியை விட்டு நீக்கப் பார்க்கிறீங்க” என சீரியசாக சொல்லியபடியே நகர்ந்தார்..
அதிமுக சீனியரே இப்படி சொன்னது ஏன்னு விசாரிச்சப்ப, “திண்டுக்கல் சீனிவாசனின் பேரன்களில் ஒருவர் விஜய்யின் தவெகவில் இணைஞ்சு பொறுப்பு கூட வாங்கிட்டாராம்..
இந்த தகவல் எடப்பாடி காதுக்கும் போனதாம். அதனால திண்டுக்கல் சீனிவாசனை கூப்பிட்டு, ” உங்க பேரன் விஜய் கட்சியில பொறுப்பு வாங்கியிருக்காராம்.. அங்கேயும் துண்டு போட்டு வைக்கிறீங்களா?”ன்னு சீரியசாக கேட்க..
திண்டுக்கல் சீனிவாசனோ, “எனக்கு அதை பத்தி எல்லாம் தெரியலங்க.. என்னான்னு கேட்கிறேன்” என சொல்லி இருக்கிறார்..
இதுல அப்செட்டான எடப்பாடி, “கட்சியோட பொருளாளரா இருக்கீங்க.. உங்களுக்கு தெரியல்லைன்னா எப்படி? ”ன்னு கடுப்படித்துவிட்டாராம்.. இதனால திண்டுக்கல் சீனி பதற்றத்துலேயே இருக்கிறாராம்..
இது மட்டும்தான் காரணமாய்யா?
இப்பதான் பாயிண்ட்டுக்கு வந்திருக்கிறீரு அய்யா.. அதிமுகவில சமீபமா பெரும் புயலே அடிச்சுகிட்டு இருக்காம்.. அதுல ஒரு பகுதிதான் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரம்..
அப்படி என்னய்யா பெரும் புயல் அடிக்குதாம்?
அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்னு இன்னும் முடிவாகலை.. ஆனா 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடனும்னு முடிவு செஞ்சு வேட்பாளர்கள் யார்னு எடப்பாடி ரெடியா வெச்சிருக்கிறாராம்..
இதை பத்தி எடப்பாடிக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, ”கொஞ்ச நாளைக்கு முன்னாடியே மாவட்ட செயலாளர்களை கூப்பிட்டு உங்க மாவட்டத்துல இருக்கிற தொகுதிகளில்ல யாருக்கு சீட் கொடுக்கலாம்னு 3 பேரை எழுதி லிஸ்ட் கொடுங்கன்னு கேட்டாரு எடப்பாடி.. மா.செ.க்களும் அவங்க 3 பேர் கொண்ட ஒரு லிஸ்ட்டை அனுப்பி வெச்சாங்க..
ஆனா எடப்பாடியோ, அந்த மா.செ.க்களை கூப்பிட்டு பல தொகுதிகளுக்கு அந்த 3 பேருல ஒருத்தரை எடுத்துட்டு ”இந்த பெயரை” சேர்த்து எழுதி லிஸ்ட்டை திருப்பி அனுப்புங்கன்னு ஆர்டர் போட்டு வாங்கி வெச்சுகிட்டாரு..” என்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு தொகுதி வேட்பாளர் விஷயத்துலயும் எடப்பாடி கவனமா இருக்கிறதுதான் அதிமுக சீனியர்ஸுக்கு ஷாக்கா இருக்காம்..
இதை பத்தி கேட்டப்ப, “2021 தேர்தல்ல மாஜி மந்திரிகள், மா.செ.க்கள் சொன்னவங்களை வேட்பாளர்களாக போட்டோம்.. ஆனா சில இடங்களில்ல மா.செ.க்களும் மாஜி மந்திரிகளும் திமுகவுக்கு சாதகமாக இருக்கிற மாதிரி வேட்பாளர்களை போட வெச்சுட்டாங்க..இந்த டைம் அப்படி விட்டுட கூடாதுன்னு எடப்பாடி நினைக்கிறார்” என சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்..
இப்ப எப்படி வேட்பாளர்களை முடிவு செஞ்சிருக்காராம் எடப்பாடி?
இதை பத்தி கேட்டப்ப, “ஒவ்வொரு தொகுதிக்கும் நம்ம கூடவே இருக்கிற நம்பிக்கையான வேட்பாளர் யார்னு அனாலிசிஸ் செய்ய பெரிய டீம் ஒன்னையே எடப்பாடி இறக்கி இருந்தாரு..
இந்த டீமை லீடு செஞ்சதே உளவுத்துறையில வேலை பார்த்த மாஜி உயர் அதிகாரிதானாம்.. அவரு டிஐஜியா இருந்து ரிட்ட்டையர் ஆகி 10 வருஷம் ஆகிடுச்சு.. எடப்பாடி கூட படிச்சவராம்..
அவரோட டீம்தான் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள்கிட்ட எந்த கெட்ட பேருமே இல்லாத , தொண்டர்கள்கிட்ட ரொம்ப நெருக்கமாக இருக்கிற, குறிப்பாக திமுக கிட்ட விலை எப்பவுமே போகாத கட்சிக்காரர் யார்?னு அனாலிசிஸ் செஞ்சு ரிப்போர்ட் கொடுத்ததாம்..
எடப்பாடியும் அந்த ரிப்போர்ட்டை வாங்கி வெச்சுட்டு அப்படியே இவர்தான் வேட்பாளர்னு எல்லாம் முடிவு செய்யலையாம்..
அந்த நபரை கூப்பிட்டு, “எலக்ஷன்ல நிக்கனும்னா நிறைய செலவு செய்யனும்.. உங்க தொகுதியில 300 பூத்து இருக்குதுன்னா அந்த பூத்துகளுக்கு எல்லாம் 3 கட்டமாக ரூ30,000- ரூ35,000 கொடுக்கனும்.. அந்த வகையில ரூ3 கோடி செலவாயிடும்..
அப்புறமா 20 நாள் பிரசாரத்துக்கு தினமும் ரூ10 லட்சம் செலவாகும்.. அப்படின்னா அதுல ரூ2. கோடி ஆயிடும்.. இந்த செலவுகள் மட்டுமே ரூ.5 கோடி வரைக்கும் வந்துடும்.. ஓட்டுக்கு கொடுக்கிற காசை தலைமை கழகம் பார்த்துக்கும்.. இந்த ரூ5 கோடியை உங்களால செலவு செய்ய முடியுமா?கையில ரூ.5 கோடி வெச்சி இருக்கீங்களா? ன்னு கேட்கிறாங்க..
“ஆமாங்கண்ணே.. என்கிட்ட ரூ.5 கோடி ரெடியா இருக்கு”ன்னு லிஸ்ட்ல இருக்கிற நபர் சொல்லிட்டா.. அடுத்ததா அவருக்கு ஒரு ‘டெஸ்ட்’ வைக்கிறாங்க…
அந்த நபரை கூப்பிட்டு, “ரூ.5 கோடி பணத்தை எடுத்துகிட்டு அந்த ”காண்டிராக்டரை”ப் போய் பாருங்கன்னு ஒரு பேரு சொல்லப்படுது..
ரூ.5 கோடியோட போற நபரை வரவேற்று உபசரிக்கும் அந்த காண்டிராக்டர், ‘எங்கப்பா பணம் கொண்டு வந்திருக்கியா? எப்படி மாத்தி கொண்டு வந்திருக்க? ஓபன் பண்ணு?”ன்னு கேட்கிறாங்க.
பணத்தை கொண்டு போனவரும், “ஆமாண்ணே அந்த தொழில்ல வந்த காசு.. இந்த நிலத்தை வித்த காசு..ன்னு சொல்லியபடியே ரூ.5 கோடி ரொக்கத்தை ‘கண்ணில்’ காட்டுகின்றனர்.
அங்கேயே சில காண்டிராக்டர்கள்.. ரூ.5 கோடி கரெக்டா இருக்கா என மிஷின்களை போட்டு எண்ணி விடுகின்றனர்.
அப்புறமாக எடப்பாடி தரப்பை தொடர்பு கொண்டு, “எல்லாம் கிளியரா இருக்குண்ணே”ன்னு காண்டிராக்டர் சிக்னல் கொடுக்கிறாரு..
அதுக்கு அப்புறமா, “பணத்தை ஒரே இடத்துல வெச்சுடாம ரெண்டு மூணு இடத்துல பிரிச்சு வைப்பா.. எலக்ஷன் நேரத்துல எடுத்துக்கலாம்.. ரொம்ப கவனமா பார்த்துக்கய்யா” என அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கின்றனர்.
இந்த மாதிரி ரூ5. கோடி ரொக்கத்தை, தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரா இருந்தப்ப தனக்கு நெருக்கமா இருந்த நம்பிக்கையான காண்டிராக்டர்காரங்ககிட்ட காண்பிச்ச நபர்தான் வேட்பாளருன்னு முடிவு செஞ்சிருக்காரு எடப்பாடி..
அதே நேரத்துல, இப்படி ஒருத்தரை எடப்பாடி எப்படி? செலக்ட் செஞ்சாருன்னு புரியாத மாஜி மந்திரிகளும் மா.செ.க்களும் ரொம்பவே குழம்பிப் போனது மட்டுமில்லாம சில ‘சம்பவங்களை’யும் செஞ்சுட்டாங்க..

இதை பத்தி எடப்பாடிக்கு ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட கேட்டோம்.” ஆமா சார்.. வட மாவட்டத்துல ரொம்ப கோபமா பேசுற ஒரு சீனியர் இருக்காரு.. அவரு, எடப்பாடியை சந்திச்சுட்டு வந்த ஒரு நிர்வாகியை கூப்பிட்டு, “நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா.. கட்சிக்குதான் எடப்பாடி பொதுச் செயலாளர்.. இந்த மாவட்டத்துக்கு நான்தான் பொதுச் செயலாளர். அவரு சொல்லி நின்னுட்டா மட்டும் ஜெயிச்சுடுவீயா? என்னை மீறி நீ எப்படி ஜெயிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்யா.. நான் நினைச்சாதான் எல்லாமே”ன்னு ரொம்பவே எகிறிட்டாராம் அந்த மாஜி மந்திரி மா.செ.
இவரு திட்டுன நிர்வாகியோட போன் ஆட்டோ கால் ரெக்கார்டுல இருந்ததால் இந்த ‘வசை’ அத்தனையும் அப்படியே எடப்பாடிக்கு ‘பாஸ்’ ஆகிடுச்சு..
அவ்வளவுதான்.. அந்த சீனியரோட பிரதரை கூப்பிட்ட எடப்பாடி, “என்ன ஓவரா பேசிகிட்டு இருக்காறாராம் பிரதர்.. என்னையே பெரிய ஆளான்னு கேட்கிறாரு. அவருதான் பொதுச்செயலாளருன்னு சொல்லிகிட்டு இருக்காரு.. எல்லாம் காதுக்கு வந்துருச்சு.. பார்த்து இருக்க சொல்லுங்க.. அப்புறம் செங்கோட்டையன் கதிதான்”ன்னு ரொம்பவே கோபமா வார்ன் பண்ணினாராம்.
என்ன இவ்வளவு ஆக்ரோஷமா சொல்றாரேன்னு கொஞ்ச நாளாவே வடமாவட்ட அந்த சீனியர் புள்ளி சைலண்ட் மோடுக்கு போயிட்டாராம்..

இதே மாதிரி மலைக்கோட்டை மாவட்டத்துல ஒரு மாஜியை கூப்பிட்டு, ”நான் சொல்ற பேரை உங்க லிஸ்ட்ல சேருங்க”ன்னு எடப்பாடி சொல்லி இருந்தாரு.. அந்த மாஜி மந்திரியோ, ”அவரா? வேற கட்சியில இருந்து வந்தவராச்சே.. அவரெல்லாம் ஜெயிக்கவே மாட்டாரு..” என்றபடியே அப்படி இப்படின்னு சொல்ல.. பொறுமையா கேட்டுகிட்ட இருந்த எடப்பாடி, “நான் சொன்ன மாதிரி மாத்தி அனுப்புங்க”ன்னு திருப்பி சொல்லி இருக்காரு..
ஆனா மாஜி மந்திரியோ கெத்தா எடப்பாடியோட தர்க்கம் பண்ண ஆரம்பிச்சாரு.. ஒரு கட்டத்துல எடப்பாடி, “நான் சொல்றதை செய்யுங்கன்னு சொல்றேன்.. அதுக்கு அப்புறம் உங்க இஷ்டங்க”ன்னு வேற ஒரு டோன்ல சொல்ல அந்த மாஜி மந்திரி கப்சிப் ஆகிப் போனாராம்..

இவங்களை எல்லாம் விட, கூடவே இருக்கிற ரொம்ப மணியான சீனியர்.. மாஜி மந்திரி.. அவ்வளவு நெருக்கமானவரு.. அவரையும் கூப்பிட்டு, “நீங்க உங்க மாவட்டத்தை மட்டும் பாருங்களேன்.. ஏன் எல்லா மாவட்டத்துலேயும் தலையிடுறீங்க.. உங்க ஏரியாவை மட்டும் பாருங்க”ன்னு காய்ச்சி எடுத்தாராம்..

கொங்கு பார்டர் மாவட்டத்துல ஒரு மாஜி மந்திரிகிட்ட, எக்ஸ் எம்.எல்.ஏ. ஒருத்தர் பேரை சேருங்கன்னு சொல்லி இருக்காரு எடப்பாடி.. அந்த பேரை கேட்டதுமே மாஜி மந்திரி ஜெர்க் ஆகிட்டாராம்.. ”அவருக்கு எல்லாம் கொடுக்க வேண்டாம்.. அவருக்கு மக்கள்கிட்ட ரொம்ப எதிர்ப்பு”ன்னு ஆரம்பிச்சு நெகட்டிவ்வா சொல்லிட்டு இருந்தாராம்.. ஆனா எடப்பாடியோ, ”எனக்கும் எல்லா தெரியும்.. அவரோட பேரை சேர்த்து அனுப்புங்க”ன்னு கறாரா சொல்லிட்டாராம்..
அந்த மாஜியோ, “ஆஹா.. மாஜி எம்.எல்.ஏ.வை எடப்பாடி உள்ளே கொண்டு வர்றதே நம்மை காலி செய்யத்தான்”ன்னு ரொம்ப பீதியில இருக்கிறாராம்..

வடக்கே இன்னொரு மா.செ., அவரும் எடப்பாடிக்கு ரொம்பவே நெருக்கமானவருதான்.. அவர் கண்ட்ரோல்ல இருக்கிற தொகுதிகளில்ல சொந்த ஜாதிக்காரங்களையா எழுதி இருந்தாராம்..
இதை வெச்சுகிட்டு அந்த மா.செ.வை கூப்பிட்டு, “நீங்க சொல்ற தொகுதிகளில்ல வன்னியர்தானே.. மெஜாரிட்டியா இருக்கிறாங்க..
அவங்கள்ல ஒருத்தரை போட்டாத்தானே ஜெயிக்க முடியும்”னு கடுப்படிச்சு தாம் சொல்ற பேர்களை எழுதி அனுப்பிடுங்கன்னு அட்வைஸ் செஞ்சாராம்..
இதுக்கு எல்லாம் மேல இன்னொரு சம்பவத்தையும் சொல்றாங்க..
எடப்பாடி மகன் மிதுன், ஒரு தொகுதிக்கு ‘இந்த நபரை போடலாம்.. நல்ல ஆளு’ன்னு ரெக்கமண்ட் பண்ணியிருக்காரு..
எடப்பாடியோ தனக்கே உரிய ஸ்டைலில் அப்படியான்னு கேட்டுகிட்டே ஒரு பைலை எடுத்து பார்த்துட்டு, “உனக்கு எதுவும் தெரியலை.. அந்த ஆளு திமுகவோட அவ்வளவு நெருக்கமா இருக்கிறாரு.. அவரை போட்டா தோத்துதான் போகனும்”னு அந்த நபரோட பூர்வோத்திரத்தையும் ஜாதகத்தையும் விலாவாரியா சொன்னாராம்… மிதுனுக்கும் கூட அப்பாவின் முகம் ஆச்சரியமாத்தான் இருந்துச்சாம்..
எடப்பாடியின் இந்த சீரியஸ் முகத்தை இதுவரை மாஜிக்கள் யாரும் நினைச்சுகூட பார்க்காததாலதான் ரொம்பவே அரண்டு போயிருக்காங்க.. ஏன்னா, “இதுவரைக்கும் சசிகலா உள்ளே வருவாங்களா.. ஓபிஎஸ் வருவாங்களா… கட்சி நம்ம கிட்ட இருக்குமா? நம்மைவிட்டு அவரு போவாரா? இவரு போவாரா?ன்னு நினைச்சு நினைச்சு ஒவ்வொரு மூவ்வையும் டிபென்ஸ் மோடுல வெச்சுகிட்டு இருந்தாரு எடப்பாடி.. இப்பதான் ரூட் எல்லாம் கிளியராகிடுச்சே.. இனி அஃபென்சிவ் மோடுதான்னு முடிவு செஞ்சிட்டாரு.. அதனால கட்சியில தனக்கான ரொம்பவே நம்பிக்கையான ஒரு டீம் வேணும்னு நினைக்கிறாரு.. அதுல ஒரு பகுதிதான் சீனியர்கள் பிடியில் இல்லாத புதிய புதிய முகங்களை தேடி தேடி கண்டுபிடிச்சு இறக்குறதாம்”னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
