அனில் அம்பானியின் உதவியாளர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 ஆண்டுகளுக்கும் மேலாக ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றி வருபவர், அசோக் குமார் பால்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் கழகத்திற்கு (SECI) ரூ.68 கோடிக்கும் அதிகமான போலி வங்கி உத்தரவாதத்தை இவர் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கொல்கத்தா, புவனேஸ்வர என பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
போலி உத்தரவாதத்தை உண்மையென காட்டுவதற்காக sbi.17313@s-bi.co.in’, ‘Indiabank.in’, ‘Indusindbank.in’, ‘pnbIndia.in’, ‘psdbank.co.in’, ‘siliguripnb.co.in’, ‘lobbank.co.in’ மற்றும் ‘unionbankofIndia.co.in’ போன்ற வணிக வங்கிகளின் போலி டொமைன்களை இவர் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை கூறுகிறது.
இந்தநிலையில் விசாரணைக்காக சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை நேற்று நள்ளிரவு கைது செய்து டெல்லியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறது.
ஏற்கனவே அனில் அம்பானி மீது பல்வேறு பணமோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதாவது, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானிக்கு யெஸ் வங்கி, 2017-19-ல் ரூ3,000 கோடி கடன் கொடுத்தது. இந்த கடன் தொகை, பல போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது தெரியவந்து சிபிஐயும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டது. இதில், வங்கிகளில் மொத்தம் ரூ17,000 கோடி கடன் பெற்று அனில் அம்பானி மோசடி செய்ததும் தெரியவந்தது.
ரூ17,000 கோடி வங்கி கடன் மோசடி விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அமலாக்கத் துறையில் அனில் அம்பானி ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.