நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், ரூ.2,000 கோடி சொத்துகளை காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அபகரிக்க சூழ்ச்சி செய்ததாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. Sonia Rahul Gandhi
நாடு விடுதலைக்கு முன்னர் 1938-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தது. இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90.21 கோடி கடன் வழங்கியது.
காங்கிரஸ் கட்சிக்கான கடனை அடைப்பதற்காக சோனியா, ராகுல் காந்தியை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனத்துக்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனம் பங்குகளை மாற்றியது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளன; சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன என்பது வழக்கு. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் புதன்கிழமையன்று நடைபெற்ற விசாரணையில், ரூ90 கோடி கடனுக்காக நேஷன்ல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை சோனியா, ராகுல் காந்தி அபகரிக்க முயன்றதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. நீதிபதி விஷால் கோக்னே முன்பாக நடைபெறும் இந்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும்.